Title of the document
தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டதால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அமைச்சர்களை சந்தித்து நேற்று கோரிக்கை மனு கொடுத்தனர்.  


ஜாக்டோ-ஜியோவின் அவசரக் கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பட்டதாரி ஆசிரியர் கழகத்தில் நேற்று காலை நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் மோசஸ், வெங்கடேசன், சங்கரபெருமாள் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, அனைத்து ஒருங்கிணைப்பாளர்களும் நேற்று காலை தலைமைச் செயலகம் சென்று அமைச்சர் ஜெயக்குமார், ெசங்கோட்டையன், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் முதன்மைச் செயலாளர் சொர்ணா, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் ஆகியோரை சந்தித்தனர். 



அந்த சந்திப்பு குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது: கடந்த 22ம் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ சார்பில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்,மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. 8 நாட்களாக நடந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 


முதல்வரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, எதிர்காலத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் வேலை நிறுத்தப் போராட்டம் 30ம் தேதியுடன் முடிக்கப்பட்டது. முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பணிக்குத் திரும்பிய ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள், பணியாளர்கள் பல்வேறு பிரச்னைகளை அதிகாரிகள் மூலம் சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பணிக்குத் திரும்பிய ஆசிரியர்கள் ஜனவரி மாதம் 21ம் தேதி வரை பணியாற்றிய பள்ளியில் சேர அனுமதிக்காமல் வேறு பள்ளிக்கு மாறுதல் என்று சொல்லி பணியில் சேர அனுமதிக்கவில்லை. 




புனையப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் பணியில் சேர்க்க மறுக்கும் நிலை உள்ளது. 
தற்காலிக பணி நீக்கம் என்று சொல்லி பணியில் சேர்க்க மறுக்கின்றனர். ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளதாக கூறியும் மறுக்கின்றனர். எனவே, பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு மாறுதல் பணியிட உத்தரவு வழங்குவதை முற்றிலுமாக கைவிட வேண்டும், மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அதையும் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். 


எங்களின் நியாயமான கோரிக்கை மீதுதான் போராட்டம் நடத்தினோம் என்ற அடிப்படை நியாயங்களை முதல்வர் மறுக்காமல் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுள்ளோம். இதையடுத்து, முதல்வர், துணை முதல்வரையும் சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம் என்றனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post