ஏழை, எளிய மக்களின் குழந்தைகளும் கல்வியறிவு பெற வேண்டும் என்பதற்காக அரசு பள்ளிகள் தொடங்கப்பட்டன. இந்த பள்ளிகளில் படித்தவர்கள் தற்போது மத்திய, மாநில அரசு பதவிகளில் முக்கிய அதிகாரிகளாக பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆங்கில வழிக்கல்வி மோகத்தால் பலர் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள். குறிப்பாக கூலி தொழிலாளர்கள் கூட தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளுக்கு அனுப்பாமல் தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள். இதன்காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.
இதையடுத்து, தமிழக அரசும் தற்போது ஆங்கில வழிக்கல்வி முறையை அரசு பள்ளிகளில் செயல்படுத்தி வருகிறது. மேலும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், சீருடை, காலணி, மடிக்கணினி, சைக்கிள் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. இதன்காரணமாக தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
தனியார் பள்ளிகள் லாபம் நோக்கோடு செயல்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதனை நிரூபிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள், நர்சரிகள் புற்றீசல்போல் தொடங்கப்படுகின்றன. இதில், குறைந்தபட்ச இடவசதி, கட்டமைப்பு வசதி, கழிப்பிடம், குடிநீர் வசதி, காற்றோட்டம், விளையாட்டு மைதானம், சுற்றுச்சுவர், தீ விபத்துக்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் தனியார் பள்ளிகள் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.
கும்பகோணத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை மாதம் தனியாருக்கு சொந்தமான பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டது. இதில், 94 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்தை யாரும் மறந்து இருக்க மாட்டார்கள். கும்பகோணம் பள்ளி தீ விபத்து போன்ற மற்றொரு பேரழிவை தமிழகம் சந்திக்கக்கூடாது. தரமற்ற, சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் விதிமீறல் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இதனைதொடர்ந்து அங்கீகாரமற்ற பள்ளிகளை தமிழக அரசு அதிரடியாக மூடி வருகிறது.
இந்தநிலையில் தமிழகம் முழுவதும் சி.பி.எஸ்.இ., நர்சரி, மெட்ரிக் பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருகிறதா? என்று பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், காஞ்சீபுரம், திருவள்ளூர், கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 366 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
இதனைதொடர்ந்து அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. அந்த நோட்டீசு கிடைத்ததும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் உடனடியாக அங்கீகாரம் பெறுவதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும். அப்படி இல்லையென்றால், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், அடுத்த கல்வியாண்டில் பள்ளிகளை மூடுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேற்கண்ட பள்ளிகள் அங்கீகாரம் பெற விரும்பினால் அந்த பள்ளி வளாகத்தின் உள் கட்டமைப்பு சார்ந்த புகைப்படங்கள், இருபக்கமும் அகலமாக மாடிப்படிகள் இருக்கிறதா என்ற விவரம், பள்ளி வளாகத்தில் ஓலை போன்ற எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருள்கள் இல்லை என்பதற்கான நிர்வாகியின் உறுதிமொழி, விளையாட்டு மைதானம் சொந்தமா, வாடகையா, அது பள்ளி வளாகத்திலேயே உள்ளதா, அருகில் உள்ளதா என்பதற்கான விவரம், பள்ளி வளாகத்திற்குள் சமையல் கூடம் போன்ற வேறு கட்டிடம் உள்ளதா என்பதற்கான அத்தாட்சி, மாணவர்களுக்கு பள்ளி வளாகம் முழுமையான பாதுகாப்பாக இருக்கிறதா என்பதற்கான உறுதிமொழி, எல்.கே.ஜி., யு.கே.ஜி. பிள்ளைகளுக்கான வகுப்பறைகள் தரைத்தளத்தில்தான் இயங்குகிறது என்பதற்கான சான்று, சுகாதார சான்றிதழ், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரின் தடையில்லா சான்று, கட்டிட உரிம சான்று உள்பட 40 விதமான நிபந்தனைகளை பூர்த்தி செய்ததற்கான ஆவணங்களும், அதற்குரிய விண்ணப்ப படிவத்தையும் இணைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து அவர் அந்த பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவார்.
கும்பகோணம் பள்ளி தீ விபத்து மீண்டும் தமிழகத்தில் நடக்கக்கூடாது. எனவே அங்கீகாரம் இல்லாத, விதிமீறல் பள்ளிகளில் தமிழக அரசு உடனடியாக மூட வேண்டும். மேலும், அந்த பள்ளிகளில் உள்ள மாணவ-மாணவிகள், அருகாமையில் உள்ள அங்கீகாரம் பெற்ற தனியார் அல்லது அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில் சேர்ந்து படிப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும். இது அரசின் கடமையும் ஆகும்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment