Title of the document

மூளை வளர்ச்சி குன்றிய 11 வயது மகனை தூக்கிய நிலையில் அங்கன்வாடி பொறுப்பாளர் வேலை கோரி கணவனால் கைவிடப்பட்ட பெண், அதிகாரிகளிடம் மன்றாடி வருகிறார்.


 விருதுநகர் மாவட்டத்தில் அங்கன்வாடிகளில் காலியாக உள்ள 184 பணியிடங்களுக்கு நேர்காணல் கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.


 கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவை, ஆதரவற்ற பெண்களுக்கு தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் கணவனால் கைவிடப்பட்ட சிவகாசி ஆறுமுகம் காலனியை சேர்ந்த பாண்டிதேவி(32) என்ற பெண் தனது 11 வயது மூளை வளர்ச்சி குன்றிய மகனை தூக்கிய நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேலைக்காக காத்திருந்தார்.


பாண்டி தேவி கூறுகையில், ‘‘கணவனால் கைவிடப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக எனது தாயின் அரவணைப்பில் புவனேஸ்வரி(13) மற்றும் மகாராஜன்(11) என்ற மூளை வளர்ச்சி குன்றிய மகனுடன் வசித்து வருகிறேன்.


 தாயார் வீட்டு வேலை செய்து காப்பாற்றி வருகிறார். சத்துணவு, அங்கன்வாடி வேலைக்கு கடந்த 5 ஆண்டுகளாக விண்ணப்பித்து வருகிறேன்.

10ம் வகுப்பு முடித்துள்ள எனக்கு இம்முறையாவது கருணை கூர்ந்து வேலை வழங்க வேண்டும்.


வேலை கிடைத்தால்தான் எனது மூளைவளர்ச்சி குன்றிய 11 வயது மகனையும், 8ம் வகுப்பு படிக்கும் மகளையும் காப்பாற்ற முடியும்’’ என்றார்.


 உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, தகுதியின் அடிப்படையில் கணவனால் கைவிடப்பட்டு, மூளைவளர்ச்சி குன்றிய குழந்தைகளை வைத்துள்ள பெண்களுக்கு வேலை வழங்க கருணை அடிப்படையில் பரிசீலித்து வருகிறோம் என தெரிவித்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post