Title of the document
தேர்வின்போது மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு மணி நேரம் கூடுதல் அவகாசம் அளிக்கும் வகையில் தனது புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளில் திருத்தம் செய்து யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) வெளியிட்டுள்ளது.


பார்வைக் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் மற்றும் எழுத முடியாத அளவுக்கு கை பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை யுஜிசி அண்மையில் வெளியிட்டது.


அதில், பார்வைக் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் மற்றும் எழுத முடியாத அளவுக்கு கை பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தேர்வு நடத்தும் கல்வி நிறுவனத்திடம் உதவியாளரைக் கேட்கலாம் அல்லது சொந்த உதவியாளரை தாங்களே அழைத்து வரலாம்.


அவ்வாறு அழைத்து வரப்படும்  சொந்த உதவியாளர் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளியின் கல்வித் தகுதியைவிட ஒரு படி கீழே இருக்க வேண்டும்.
 தேர்வறைகளைப் பொருத்தவரை, மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்லக் கூடிய வகையில் அமைக்க வேண்டும். முடிந்தவரை இவர்களுக்கான தேர்வறை தரைத் தளத்தில் இருக்குமாறு அமைக்கவேண்டும்.


 மேலும், தேர்வறையில் பேசும் கால்குலேட்டர், பிரெய்லி ஸ்லேட், அபாகஸ், ஜியோமெட்ரி பாக்ஸ், பிரெய்லி அளவிடும் டேப் ஆகியவற்றை குறிப்பிட்ட மாற்றுத் திறனாளிகள்  பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட புதிய நடைமுறைகள் இடம்பெற்றிருந்தன.


 இது மாற்றுத்திறனாளிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
ஆனால், தேர்வின்போது இந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கூடுதல் கால அவகாசத்தை மாற்றி, ஒரு மணி நேரத்துக்கு 20 நிமிடங்கள் மட்டும் கூடுதலாக வழங்கும் வகையில் புதிய நடைமுறை இந்த புதிய வழிகாட்டுதலில் அறிவிக்கப்பட்டது.


 இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இந்த கூடுதல் கால அவகாசம் போதுமானதாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், வழிகாட்டுதலில் இடம்பெற்றிருந்த தேர்வுக்கான கூடுதல் கால அவகாசத்தில் தற்போது திருத்தம் மேற்கொண்டு யுஜிசி செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, 3 மணி நேரம் நடத்தப்படும் தேர்வில் உதவியாளரை பயன்படுத்தும் மற்றும் பயன்படுத்தாத அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் ஒரு மணி நேரம் கூடுதல் கால அவகாசம் அளிக்கலாம் என யுஜிசி அறிவித்துள்ளது. இது மாற்றுத் திறனாளிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post