Title of the document
மாணவர்கள் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், பொறியாளராகவும் உருவாக பத்தாம் வகுப்புவரை தாய்மொழியில் அறிவியல் பாடங்களைப் படிப்பது அவசியம் என, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கூறினார்.
உத்தமம் நிறுவனமும், அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து பதினெட்டாவது தமிழ் இணைய மாநாட்டை சென்னையில் செப்டம்பர் 20-22 தேதிகளில் நடத்த உள்ளது.
இதை அறிவிக்கும் நிகழ்ச்சி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது துணைவேந்தர் சூரப்பா கூறியதாவது:
தமிழகத்தின் பல கிராமங்களில் வசிக்கும் மக்கள் இன்றைக்கும் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத நிலையில் உள்ளனர்.  இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன், கிராமப்புறங்களின் இந்த நிலையை மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். தமிழ் மொழியை மட்டுமன்றி, அறிவியல் தொழில்நுட்பங்களையும் தமிழ் மொழியில் அவர்கள் கற்பதற்கான உதவி செய்யப்படவேண்டும். இது குறித்து தமிழ் இணைய மாநாடு முக்கியமாக விவாதிக்க வேண்டும்.
வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளோடு ஒப்பிடும்போது அறிவியல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா பெரிய அளவில் முன்னேறவில்லை. இதற்கு அடிப்படை அறிவியலை தாய் மொழியில் கற்க நாம் வெட்கப்படுவதே முக்கிய காரணங்களில் ஒன்று என, லண்டன் ராயல் சொஸைட்டி தலைவரும், வேதியியல் துறையில் நோபல் பரிசு பெற்றவருமான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜெர்மன், பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகள் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் முன்னேறியிருப்பதற்கு, அந் நாட்டு குழந்தைகள் அடிப்படை அறிவியலை அவர்களின் தாய் மொழியில் கற்பதே முக்கியக் காரணம். இதன் மூலம் அறிவியல் தொழில்நுட்பங்களை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது.
எனவே, பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்புவரையிலாவது அடிப்படை அறிவியலை அவரவர்களின் தாய் மொழியில் கற்க வேண்டும். அப்போதுதான், தலைசிறந்த விஞ்ஞானியாகவும், பொறியாளர்களாகவும் உருவாக முடியும்.
இந்தக் கருத்தை தமிழ் இணைய மாநாடும், மக்களிடையே எடுத்துச் செல்லவேண்டும். அதோடு, இந்த மாநாட்டில் பங்கேற்கும் ஆராய்ச்சியாளர்கள், அறிவியல் புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும் என்றார் அவர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post