அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு பாடம் எடுக்க இடைநிலை
ஆசிரியர்களை நியமனம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ச.மயில். இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தமிழகத்தில் முழுவதும் 2,381 அங்கன்வாடி மையங்களில், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்பும் தொடங்கப்பட்டுள்ளன. இந்த வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கு, பாடம் நடத்த இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மழலையர் கல்வி பயிற்சிப் பெற்ற ஆசிரியர்களைதான் இதுபோன்ற வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்க முடியும். இடைநிலை ஆசிரியர்கள் இந்த பயிற்சியை பெறாதவர்கள். எனவே, இந்த நியமனத்துக்கு தடை விதிக்கவேண்டும். அரசின் உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் ஜி.சங்கரன் ஆஜராகி, ‘மழலைர் கல்வி பயிற்சி பெறாதவர்களை ஆசிரியர்களாக நியமித்தால், குழந்தைகளின் மனநிலை உணர்ந்து பாடம் நடந்த அவர்களுக்கு தெரியாது. எனவே, இந்த நியமன உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும்’ என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி ஆர்.மகாதேவன், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ஆசிரியர் நியமனம் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டார்.மதுரை கிளையில் அரசு உறுதி: இதுதொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையிலும் சிலர் மனு செய்துள்ளனர். அதில், ‘‘எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்கள் இதற்குரிய கிண்டர் கார்டன் பயிற்சி அல்லது மாண்டிசோரி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். எனவே அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தொடக்க கல்வி இயக்குநர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில்,‘எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்கள் மாண்டிசோரி பயிற்சி பெற வேண்டும் என்பதில் இருந்து விலக்களிக்கக் கோரி தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு விண்ணப்பித்துள்ளோம். இந்த முறையீடு நிலுவையில் உள்ளது’’ என கூறப்பட்டிருந்தது. அப்போது நீதிபதி, ‘அதுவரை இடைநிலை உபரி ஆசிரியர்களை எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு மாற்ற மாட்டீர்களா?’ என்று கேட்டார். இதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், அதுவரை மாற்றமாட்டோம் என்றார். இதை பதிவுசெய்து கொண்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை ஜன. 30க்கு தள்ளி வைத்தார்.
Post a Comment