Title of the document

ஆசிரியர் பொது இடமாறுதல் தொடர்பாக மாவட்ட வாரியாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனு விவரம்: 2018- 19ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பொதுஇடமாறுதல் கலந்தாய்வு விதிப்படி நடைபெறவில்லை. அதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த முறைகேடால் 10 ஆண்டுகளுக்கு மேலாக பிற மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களின் சொந்த மாவட்டங்களுக்கு இடமாறுதல் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

ஆனால், பிற மாவட்டங்களில் 5 மாதங்கள் மட்டுமே பணிபுரிந்த பலர், பணம் கொடுத்து சொந்த மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற்றுள்ளனர். ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பான அரசாணை அடிப்படையில், மேல் நடவடிக்கை மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும். ஆசிரியர் கலந்தாய்வு முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, 2018-19ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பொது கலந்தாய்வு தொடர்பான விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், ஆசிரியர் பொது இடமாறுதல் தொடர்பாக மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலருக்கு உத்தரவிட்டனர். 
மேலும், கலந்தாய்வு நடைபெற்ற 18.6.2018 ஆம் தேதிக்குப் பிறகு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எத்தனை பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணியிடக் காலியிடம் ஏற்பட்ட நாள், அந்த பணியிடத்துக்கு நியமிக்கப்பட்டவரின் பணி அனுபவம் ஆகியவை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜனவரி  21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post