Title of the document

விக்கல் வருவதற்கான காரணங்கள் என்ன? 

இயல்பாக சுவாசம் நடைபெறும்போது விக்கல் உண்டாவதில்லை. சில சமயம் இரைப்பையில் இருக்கும் அமிலத்தால் தாக்கமடைந்து செல்லும் காற்று நுரையீரலை அடையும்போது, விக்கல் உண்டாகிறது. உணவில் அதிக அமிலம் சேரும்போதும் விக்கல் உண்டாகும். வேகமாக சாப்பிடுவது, சூடாக உண்பது, போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, ஒத்துக்கொள்ளாத மருந்துகளை எடுத்துக்கொள்வது போன்ற பல வகைகளில் விக்கல் உண்டாகிறது. அடிக்கடி விக்கல் வந்தால், உணவில் அதிக காரம், மசாலாப் பொருள்களைத் தவிர்ப்பது நல்லது.

சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்புத் தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது.
உடனே, தொண்டையில் உள்ள குரல்நாண்கள் திறக்கின்றன. அப்போது நுரையீரலுக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது. அதேநேரம் நுரையீரலுக்குள் காற்று செல்ல அதிக இடம் கிடைக்கிறது. இதனால் நாம் சுவாசிக்கும் காற்று, திறந்த குரல்நாண்கள் வழியாகத் தங்கு தடையின்றி நுரையீரல்களுக்குள் நுழைந்துவிடுகிறது. இதுதான் இயல்பாக நிகழும் சுவாச நிகழ்வு.

சில நேரங்களில், மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளைக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாகத் திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பித்துவிடும். அப்போது குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.

அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது அந்தக் காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் ‘விக்... விக்...' என்று ஒரு விநோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் ‘விக்கல்'.

என்ன காரணம்?

வேக வேகமாக உணவைச் சாப்பிடுவது, மிகச் சூடாக சாப்பிடுவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்தாதது போன்றவை விக்கலுக்கு முக்கியக் காரணங்கள். வலிநிவாரணி மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகளைச் சாப்பிட்டாலும் விக்கல் வரும்.

இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் தொடர்ந்தால், அது நோய்க்கான அறிகுறி. உதாரணத்துக்கு, இரைப்பையில் அல்சர் இருக்கும்போது, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். உதரவிதானத்தில் நோய்த்தொற்று, கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, பெரினிக் நரம்புவாதம் போன்றவற்றாலும் விக்கல் வரும்.

நிறுத்த என்ன செய்வது?

மூச்சை நன்றாக உள்ளிழுத்து அடக்கிக்கொள்ளுங்கள். 20 எண்ணும் வரை மூச்சை வெளியில்விட வேண்டாம். பிறகுதான் மூச்சை வெளியில்விட வேண்டும். இப்படி 5 முறை செய்தால் விக்கல் நின்றுவிடும்.

வேகமாக ஒரு சொம்பு குளிர்ந்த தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஒரு தேக்கரண்டி சர்க்கரையை நாக்கில் வைத்து அதைத் தானாகக் கரையவிட்டால், விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால், விக்கல் நிற்கும்.

அடுத்த வழி இது. ஒரு காகிதப்பைக்குள் மூச்சை விடுங்கள். பிறகு அந்தக் காற்றையே மீண்டும் சுவாசியுங்கள். இவ்வாறு 20 முறை செய்தால், ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து, விக்கல் நின்றுவிடும். அடிக்கடி விக்கல் ஏற்பட்டாலோ, 2 நாட்களுக்கு மேல் விக்கல் நீடித்தாலோ மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post