Title of the document

பொள்ளாச்சி தாலுகாவில் கிராமங்களில் செயல்படும் அரசு பள்ளிகளை முறையாக பராமரிக்கப்படாத அவலம் தொடர்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி தாலுகாவிற்கு உட்பட்ட நகர் மற்றும் வடக்கு, தெற்கு, ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், மக்கள் தொகை அதிகமாக இருக்கும் கிராமங்களில், சுமார் 275க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளி மற்றும் அரசு பள்ளிகள் செயல்படுகிறது.


இப் பள்ளிகளில், பராமரிப்பு பணி மேற்கொள்ள அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் குறிப்பிட்ட நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நிதியை கொண்டு பள்ளிகளை மராமத்து மேற்கொள்ளுதல், சுற்றுச்சுவர் அமைத்தல், கழிவறை அமைத்தல், கூடுதல் வகுப்பறை கட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். 

ஆனால், பல ஊராட்சிகளில் செயல்படும் அரசு பள்ளிகளின் பராமரிப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதிலும் பல துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் கழிப்பிட வசதி மற்றும் சுற்றுசுவர் வசதி இல்லை.  பள்ளிக்கு என்று ஒதுக்கப்படும் நிதியை கொண்டு, முறையாக பராமரிப்பு பணி மற்றும் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளாமல் இருப்பதாகவும், பழுதான கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டாமலும், புதர் சூழ்ந்த பகுதியை சீரமைக்கப்படாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, பல்வேறு அரசு பள்ளிகளில் இரவு காவலர்கள் நியமிக்காததால் பல்வேறு சமூகவிரோத செயல்கள் நடப்பது தொடர்கிறது. 

இதுகுறித்து கிராம பகுதி மக்கள் கூறுகையில்,`பொள்ளாச்சி தாலுகாவில் குக்கிராமங்கள் அதிகம் உள்ளன. இங்குள்ள பல கிராமங்களில் அரசு பள்ளிகள் செயல்பட்டாலும், அங்கு மாணவர்களுக்கு  தேவைக்கான அடிப்படை வசதி இல்லாதது கவலை அளிக்கிறது. குறிப்பாக, பல பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லை. சில பள்ளிகளில் இடிந்த சுற்றுச்சுவர் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில், பள்ளி வளாகத்திற்குள் சமூக விரோதிகள் புகும் அவலம் தொடர்கிறது. 

இதனால் கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி மற்றும் அரசு பள்ளிகளில் படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. எனவே, கிராம ஊராட்சிகளில் உள்ள அரசு பள்ளிகளை முறையாக பராமரித்து மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய கல்வித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்’ என்றனர்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post