கல்வித்துறையின் குளறுபடி அறிவிப்பு: குழப்பமடைந்த தலைமை ஆசிரியர்கள்

பள்ளிகள் சனிக்கிழமை இயங்குவது சம்பந்தமாக கல்வித் துறை வெள்ளிக்கிழமை அனுப்பிய குளறுபடியான அறிவிப்பால் தலைமை ஆசிரியர்கள் குழப்பத்துக்கு உள்ளாகினர்.
 வேலூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை பல்வேறு அறிவிப்புகளை இணையதளம், குறுந்தகவல்கள், கட்செவி அஞ்சல் வழியாக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வருகிறது. சனிக்கிழமைகளில் பள்ளி இயங்குமா அல்லது விடுமுறையா என்பது குறித்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு கட்செவி அஞ்சல் வாயிலாக தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைப் பொருத்தவரை சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு தகவல்களை அனுப்பி வைக்கின்றனர். இதற்காக வட்டாரக் கல்வி அலுவலர்கள் செல்லிடப்பேசியில் தனிக் குழுவை ஏற்படுத்தி, அதில் தலைமை ஆசிரியர்களைச் சேர்த்துள்ளனர். அதன் மூலம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தகவல்களை தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
 இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஜன.4) மாலை சுமார் 3.39 மணிக்கு கட்செவி அஞ்சல் குழுவில் ஒரு தகவல் வட்டாரக் கல்வி அலுவலரால் பதிவு செய்யப்பட்டது.
 அதில், வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கையின்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் (ஜன. 5) சனிக்கிழமை பள்ளி வேலை நாளாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பள்ளி வேலை நாள் என அறிவிக்கப்பட்டது.
 சிறிது நேரம் கழித்து மாலை 4.01 மணிக்கு மற்றொரு தகவல் பதிவானது. அதில், மேற்கண்ட தகவல் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. முதன்மைக் கல்வி அலுவலரின் தகவலின்படி (ஜன.5) சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை நாள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
 இந்த குளறுபடியான தகவல் காரணமாக தலைமை ஆசிரியர்கள் குழப்பத்துக்கு உள்ளாகினர். சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலருக்கு தலைமை ஆசிரியர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேலை நாளா? அல்லது விடுமுறையா? எனக் கேட்டு விடுமுறை தான் என்பதை உறுதிபடுத்திக் கொள்ளும் இக்கட்டான நிலை ஏற்பட்டது.
 மாலை பள்ளி முடியும் நேரத்தில் இருவேறு தகவல்கள் கல்வித் துறை அதிகாரிகளால் அனுப்பப்படும்போது ஒரே ஒரு தகவலை மட்டும் தலைமை ஆசிரியர்கள் பார்த்துவிட்டு, மற்றொரு தகவலைப் பார்க்காமல் விட்டால் மேலும் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர். சில நாள்களில் வெள்ளிக்கிழமை பள்ளி வேலை நேரம் முடிந்த பிறகு சனிக்கிழமை வேலை நாள் என்ற தகவல் தலைமை ஆசிரியர்களுக்கு சென்று சேரும் பட்சத்தில் வீடுகளுக்குச் சென்றுவிட்ட மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி வேலை நாள் என்பதை எப்படி தெரிவிப்பது? என்று தலைமை ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
 வேலூர் மாவட்டத்தில் சிறுபான்மையின முஸ்லிம் பள்ளிகள் வெள்ளிக்கிழமை விடுமுறையை விடும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றன.
 அத்தகைய சூழ்நிலையில் சனிக்கிழமை வேலை நாளா? அல்லது விடுமுறை நாளா? என்பதை சம்பந்தப்பட்ட முஸ்லிம் பள்ளிகளுக்களுக்கு வியாழக்கிழமை தெரிவித்தால் தான் மாணவர்களுக்கு அவர்கள் தகவல் தெரிவிக்க முடியும்.
 வெள்ளிக்கிழமைகளில் தகவல் தெரிவித்தால் அன்று பள்ளி விடுமுறையாக இருப்பதால் மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியாது என்ற பிரச்னையும் நிலவுகிறது.
 எனவே, சனிக்கிழமை விடுமுறையா அல்லது வேலை நாளா என்பதை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் வியாழக்கிழமைகளில் காலை நேரத்திலேயே தகவல் அனுப்பப்பட வேண்டுமென்று தலைமை ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 

0 Comments:

Post a Comment