அங்கன்வாடி மையங்களில் படிக்கும் எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு நான்கு செட் சீருடை, செருப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதனை தொடர்ந்து குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் வகையில், மாண்டிசோரி கல்வி அடிப்படையிலான எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை அங்கன்வாடியில் துவங்க அரசு முடிவு செய்தது. அதன்படி, அரசு நடுநிலைப்பள்ளிகளில் செயல்படும் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் வரும் 21ம் தேதி முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதில், 52 ஆயிரத்து 933 குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். எல்கேஜி வகுப்பில் 3 முதல் 4 வயதான குழந்தைகளும், யுகேஜி வகுப்பில் 4 வயது முதல் 5 வயதான குழந்தைகளும் சேர்க்கப்படுவார்கள். இந்த குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் .
இந்தநிலையில், தமிழக அரசு அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு 4 செட் சீருடை, ஒரு ஜோடி செருப்பு, மலைப்பகுதி குழந்தைகளுக்கு ஒரு ஸ்வெட்டர், மழைக்காலத்தில் பயன்படுத்தும் ெரயின்கோட், கலர் பென்சில், பாட புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ரூ.773.32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு குழந்தைக்கு 4 செட் சீருடைக்கு ரூ.960, செருப்பு ரூ.144.90, மலைப்பகுதி குழந்தைகள் 471 பேருக்கு ஒரு ஸ்வெட்டர் ரூ.208.30, 471 குழந்தைகளுக்கு ஒரு ரெயின்கோர்ட் ரூ.323.92 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டம் சோதனை அடிப்படையில் 3 ஆண்டுகள் செயல்படுத்தப்படும். இதனை தொடர்ந்து குழந்தைகளின் வருகை, கற்றுக்கொள்ளும் திறன் தொடர்பாக மதிப்பீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அங்கன்வாடி மையங்களில் நாளை முதல் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவித்தனர்.
Post a Comment