32 அமைச்சர்களுக்கு மாதம் 3.44 கோடி செலவு!

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831
* பட்டியலை வெளியிட்டு அரசு ஊழியர்கள் போராட்டம்
* தமிழக அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதிலடி

சென்னை : அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு கடுமையான விமர்சனங்களை அமைச்சர்கள் தெரிவித்து வரும் நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர், தமிழக அமைச்சர்கள் பெறும் சலுகை பட்டியலை வெளியிட்டுள்ளனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், தமிழக அரசு அவர்களின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. குறிப்பாக அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, ‘‘தமிழக அரசின் வருவாயில் 71 சதவீதம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. வருவாயில் அதிகப்படியான நிதியை ஓய்வூதியத்துக்கு செலவு செய்ய வேண்டிய நிலை வந்ததால் நாடு முழுவதும் 2003ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது’’ என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்ட களத்தில் பேசும்போது, ‘எம்எல்ஏக்களுக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்கப்படுவது ஏன்? பள்ளி ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு வேலைக்கு அனுப்புவோம்’ என்று கூறி அரசு எங்களை கேவலப்படுத்துகிறது. காலியாக உள்ள எம்எல்ஏக்கள் பணியிடங்களில் ஆசிரியர்களை நியமித்தால் நாங்களும் சிறப்பாக பணியாற்றுவோம் என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

மேலும், அமைச்சர், எம்எல்ஏக்கள் சம்பளம், ஓய்வூதியம் தவிர வேறு என்னென்ன சலுகைகளை பெறுகிறார்கள் என்று ஆசிரியர்கள் பட்டியல் போட்டு தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அதன்படி, தமிழக எம்எல்ஏக்களின் மாத சம்பளம், படிகள், இலவச வசதிகள் விவரம் வருமாறு: மாதம் அடிப்படை சம்பளம் ரூ.30000, டெலிபோன் படிகள் ரூ.10000, தொகுதி படிகள் ரூ.25000, தபால் படிகள் ரூ.2500, தொகுப்பு படிகள் ரூ.5000, வாகனப் படிகள் ரூ.25000, மாதம் மொத்த சம்பளம் ரூ.1,05,000. சட்டசபைக்கு வந்தால் தினப்படி ரூ.500, பயணப்படி ஏசி முதல் வகுப்பு போக வர வசதிகள், இலவச பஸ்பாஸ், மாதம் இடைதங்கல் ரயில் படிகள் ரூ.20000, இலவச வீட்டு தொலைபேசி, இலவச மருந்துகள், மருத்துவச் செலவு மொத்தமாக திரும்ப வழங்கப்படும். பெரிய அறுவை சிகிச்சைகளுக்கு நிதி உதவி.  இதுமட்டுமின்றி, இலவச எழுது பொருட்கள், 37 லெட்டர் பேடு தலா 100 பக்கங்கள், 1500 வெள்ளைத் தாள்கள், 750 காகித உறைகள் (பெரியது), 1500 காகித உறைகள் (சிரியது), ஹீரோ பேனா 1, சட்டமன்ற டயரி, 2 அரசு காலண்டர், சட்டசபை கூட்டங்களின்போது தற்காலிக தமிழ், ஆங்கில தட்டச்சர்கள் தற்காலிகமாக நியமனம் செய்து கொள்ளலாம்.

மேலும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க 2 ஏசி ஜிம்கள், சட்டசபை கூட்டத் தொடரின்போது யோகா வகுப்பு, இலவச செய்தித்தாள்கள் 2, எம்எல்ஏ இறந்த பிறகு குடும்பத்திற்கு மாதம் ரூ1000 குடும்ப படிகள், பதவியில் இருக்கும் எம்எல்ஏ இறந்தால் ரூ.2 லட்சம், பென்சன் பெறும் எம்எல்ஏ இறந்துவிட்டால் அவர் வாங்கிய ஓய்வூதியத்தில் 50 சதவிகிதம் பேமிலி பென்சன் ஆகிய வசதிகள் செய்யப்படுகின்றன. எம்எல்ஏக்களின் நிலைதான் இப்படி என்றால், அமைச்சர்களாக இருப்பவர்களின் சொகுசு பட்டியலை பார்த்தால் அதிர்ச்சியூட்டுகிறது. மாநிலத்தின் 32 அமைச்சர்களுக்கு மட்டும் மாதம் தோறும், ரூ. 3.44 கோடி செலவாகிறது. தற்போதைய நிலவரப்படி அமைச்சர்கள், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர், எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு மாதம் ரூ.5,40,07,000ம்,  ஆண்டுக்கு ரூ.64,80,84,000ம் செலவாவதாக தமிழக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சலுகைகளுக்கு எதிர்ப்பு

அரசியலமைப்பு சட்டத்தின் 14வது பிரிவுக்கு எதிராக ஓய்வுபெற்ற எம்பிக்களுக்கு ஓய்வூதியம் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக லோக் பிரஹாரி என்ற என்ஜிஓ நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும் அவர்களுக்கு ஓய்வூதியம் போன்ற சலுகைகளை சட்டம் இயற்றப்படாமல் வழங்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அப்போதைய நீதிபதிகள் ஜே,செல்லமேஸ்வர் மற்றும் சஞ்ஜய் கிஷன் கவுல் அமர்வு, ஓய்வுபெற்ற எம்பிக்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகள் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அரசியலமைப்பு சட்டத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. ஆனால், ஓய்வுபெற்ற எம்பி, எம்எல்ஏக்களுக்கு பென்ஷன் போன்ற சலுகைகள் வழங்கத் தேவையில்லை என்ற கருத்தும், விவாதமும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Post a comment

0 Comments