பிளஸ் 1 அகமதிப்பீடு தேர்வில் 11,268 மாணவர்களுக்கு பூஜ்யம் மதிப்பெண்-பள்ளி தலைமையாசிரியர்களிடம் கல்வித்துறை விளக்கம் கேட்டுள்ளது

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கான அகமதிப்பீட்டுத் தேர்வில் 11,268 பேருக்கு பூஜ்யம் மதிப்பெண் வழங்கப்பட்டது குறித்து பள்ளி தலைமையாசிரியர்களிடம் கல்வித்துறை விளக்கம் கேட்டுள்ளது.
தமிழகத்தில் நிகழாண்டு மார்ச் மாதம் பிளஸ் 1 மாணவர்களுக்கு முதல் முறையாக பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில், ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 200 மதிப்பெண் என்பது 100 ஆகக் குறைக்கப்பட்டது. மேலும், பாடவாரியாக, 10 மதிப்பெண் அகமதிப்பீடாக வழங்கப்படுகிறது. தொழில்கல்வியில், செய்முறை இருக்கும் பாடங்களுக்கு மட்டும் தலா 25 அகமதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது. இந்தநிலையில், 2017-2018 ஆம் கல்வியாண்டில் படித்த பிளஸ் 1 மாணவர்களில் 20 சதவீதம் பேருக்கு (11,268) அகமதிப்பீட்டு மதிப்பெண், ஒன்று கூட வழங்காமல் பூஜ்யமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் மொத்த மதிப்பெண் குறைந்ததும், தேர்ச்சி பெறாததும் தெரியவந்துள்ளது. பள்ளி வருகைப் பதிவு, 75 சதவீதம் இருந்தால், அந்த மாணவருக்கு, ஒரு மதிப்பெண்ணை, அகமதிப்பீட்டு மதிப்பெண்ணாக வழங்கலாம் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த ஒரு மதிப்பெண்ணையும், பல மாணவர்கள் பெறவில்லை. அப்படியென்றால் 20 சதவீத மாணவர்கள் 75 சதவீத நாள்கள் பள்ளிக்கு வராமல், தேர்வை எழுதினார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலமாக அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் பல மாணவர்களுக்கு பிளஸ் 1 தேர்வில் அக மதிப்பெண் பூஜ்யம் என நிர்ணயித்தது ஏன்? 75 சதவீதம் வருகை பதிவு இல்லாத மாணவர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்களா? பூஜ்யம் வழங்கிய ஆசிரியர்கள் யார்? என்ற விவரத்தை தாக்கல் செய்யும்படி கூறப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment