ஓவியத்தில் காவியம்முதுகுளத்துார்ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி பொது இயந்திரவியல் பிரிவில் படிக்கும் இரு மாணவர்கள் ஓவியத்தில் காவியம் படைத்து வருகின்றனர்.

பொது இயந்திரவியல் பிரிவில் முதலாம் ஆண்டு படிக்கும் முனீஸ்வரன், இரண்டாம் ஆண்டு படிக்கும் லெட்சுமணன் இருவரும் எந்த வித ஓவியப் பயிற்சியும் இல்லாமல் ஓவியத்தில் சாதனை புரிந்து வருகின்றனர். மனிதர்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் எந்த பொருளைப் பார்த்தாலும் தத்ரூபமாக வரைந்து விடுகிறார்கள்.இதற்கு அவர்களுக்கு பெயின்ட், வண்ணம் தீட்டும் பொருட்கள் எதுவும் தேவைப்படுவது இல்லை. பள்ளியில் பயன்படுத்தும் பென்சில், சாக்பீஸ், ஜியாமெட்ரி கருவிகளை வைத்தே வரைந்து விடுகிறார்கள்.

இவர்கள் இருவரும் வரைந்த படங்களை ஒவ்வொரு வகுப்பறைகளிலும் தொங்க விட்டுள்ளனர்.ஏதாவது நிகழ்ச்சிகளில் உள்ள ஓவியத்தை தத்ரூபமாக வரைகின்றனர். பிளஸ் 1 மாணவர் முனீஸ்வரன் ராமநாதபுரத்தில் நடந்த மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றுள்ளார். திருச்சியில் நடந்த மாநில போட்டியில் இன்றைய தமிழர்களின் கிராமியக் கலாசாரம் அழிந்து வருவதை சிறப்பாக ஓவியத்தில் வரைந்து பரிசு பெற்றார்.ஒரே பிரிவில் படிக்கும் இரு மாணவர்களையும் வருங்கால ஓவிய சாதனையாளர் ரவிவர்மா என்றும் செல்லமாக அழைத்து வருகின்றனர்.