Title of the document

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்தபடி நாளை முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்குகின்றனர். 10 லட்சம் பேர் பங்கேற்கும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் அரசு அலுவலகப் பணிகள், பள்ளிகளின் தேர்வுப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டுக்கு பிறகு பணயில் சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், பணியாளர்கள் பல்வேறு துறைகளில் உள்ள தொழில் நுட்ப ஊழியர்கள், ஊர்து ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளை களைதல், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில ஆண்டுகளாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்தி வரும் போராட்டம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 

பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால்,  டிசம்பர் 4ம் தேதியில் இருந்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இந்த நிலையில் நவம்பர் 30ம் தேதி பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு விடுத்தது. அரைநாள் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி ஜாக்டோ-ஜியோ நாளை காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்க உள்ளது. அதனால், ஜாக்டோ-ஜியோ அமைப்பை முதல்வர் எடப்பாடி அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் போராட்டத்தை நடத்த வேண்டாம் என்று மட்டுமே முதல்வர் தெரிவித்தார். 

ஆனால், அரசுத் தரப்பில் உறுதியான முடிவு அறிவிக்காத வரையிலும், தீர்வு காணாத வரையிலும் இந்த போராட்டத்தை நடத்துவது என்று மேற்கண்ட அமைப்பினர் உறுதியாக உள்ளனர்.  அரசு ஊழியர்கள் சங்கங்களில் துறை வாரியான சங்கங்கள் 200 இருக்கின்றன. அதில் அரசு ஊழியர்கள், அங்கன்வாடி, சத்துணவுப்பணியாளர்கள், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மீன் வளர்ச்சித்துறை, வேளாண்துறை, பொதுப்பணித் துறை, மருத்துவத்துறை, துப்புரவுப் பணியாளர்கள், இரவுக் காவலர்கள், நீதித்துறை, நில அளவைத்துறையினர் என 6 லட்சம் பேரும்,  அதேபோல ஆசிரியர்களில் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள், தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்கள், என 4 லட்சத்து 50 ஆயிரம் பேரும் நாளைய போராட்டத்தில் பங்கேற்கின்றனர். இதனால் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசு அலுவலகங்களின் தினசரி பணிகள் பாதிக்கப்படும். பள்ளிகளை பொறுத்தவரையில் தற்போது அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க உள்ளதால் தேர்வுக்கான கற்பித்தல் பணி, தேர்வுப் பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

காலவரையற்ற ஸ்டிரைக்கில்...
* காலவரையற்ற இந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் சில அரசு மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் பங்கேற்கப் போவதில்லை என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டன.
* நாளை வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியதும், 4ம் தேதி வட்டார, ஒன்றிய அளவில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
* 5ம் தேதி தாலுகா தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும்.
* 6ம் தேதி மாவட்ட அளவில் கமிட்டி கூட்டங்கள் கூட்டி முடிவு எடுக்கின்றனர். 
* 7ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். 
* 8,9 தேதிகளில் மாநில  உயர்மட்டக் குழு அடுத்த நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post