Title of the document


அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களில் 814 கணினி பயிற்றுநர்களை நியமிக்க அனுமதி அளித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
 இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ் பிறப்பித்துள்ள அரசு உத்தரவு: கடந்த அக்டோபர் மாதம் பள்ளிக் கல்வி இயக்குநர் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் தற்போது 2,939 அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
 அவற்றில் தற்போது 814 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 பொதுத் தேர்வு எழுதும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் நலன் கருதி மேற்கண்ட 814 கணினி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தற்காலிக ஏற்பாடாக நவம்பர் 2018 முதல் பிப்ரவரி 2019 முடிய 4 மாதங்கள் அல்லது ஆசிரியர் தேர்வு வாரிய நேரடி நியமனம் மூலம் கணினி ஆசிரியர்கள் நியமிக்கும் வரை, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ.7,500 தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும்போது குழு ஒன்று அமைத்து ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும், கணினி பயிற்றுநர்களுக்கு தொகுப்பு ஊதியம் வழங்க வசதியாக ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்
 கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலித்து அதை ஏற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 உள்ளூர் இளைஞர்களுக்கு வாய்ப்பு: ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7,500 தொகுப்பூதியம் வழங்கப்படும். பணியிடங்களில் கணினி பயிற்றுநர்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க, அந்தந்த ஊர்களில் பள்ளி அருகில் வசிக்கும் உள்ளூர் இளைஞர்களில் கணினி பட்டம் பெற்று பி.எட்., தகுதி பெற்றவர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் தேர்வுக் குழு மூலமாக நியமனம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
 ஒப்பந்த அடிப்படையிலான இந்தத் தற்காலிக நியமனங்கள் தற்போதுள்ள காலிப் பணியிடங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த நியமனம் தற்காலிகமானது என சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
 இவ்வாறு நியமிக்கப்படும் தற்காலிக கணினி பயிற்றுநர்களுக்கு மூன்று மாதங்களுக்கு (2018 டிசம்பர்- 2019 பிப்ரவரி வரை) ஊதியம் வழங்கும் வகையில் ஏற்படும் உத்தேச செலவினம் ரூ.1 கோடியே 83 லட்சத்து 15 ஆயிரம் நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது என அதில் கூறியுள்ளார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post