Title of the document
கட்டிட வசதிகள் இன்றி தவித்த அரசுப் பள்ளி ஒன்றில் கட்டிடம் கட்டப் பத்தரை லட்ச ரூபாய் கொடுத்து உதவி அசத்தி இருக்கிறார் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் இருக்கிறது தொட்டியப்பட்டி. திருப்பூர் மாவட்ட எல்லையை ஒட்டி கரூர் மாவட்ட கடைக்கோடி கிராமமாக இருக்கும் இந்த ஊரில் இருக்கிறது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. வெறும் ஐந்து மாணவர்களோடு மூடப்படும் நிலையில் இருந்த பள்ளியை இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வந்த மூர்த்தி, தனது முயற்சியால் இப்போது 68 மாணவர்கள் படிக்கும் பள்ளியாகத் தரம் உயர்த்தி இருக்கிறார். அதோடு ஊர் மக்களை கல்விச்சீர் கொடுக்க வைப்பது, ஸ்பான்ஸர்களை பிடித்து பள்ளியை மாடர்னாக மாற்றுவது என்று சிறப்பாக செயல்பட்டு, இந்த பகுதி பெற்றோர்களைத் தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பிள்ளைகள் இந்த அரசுப் பள்ளியில் கொண்டு வந்து சேர்க்கும் அளவிற்குச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.


இங்கு ஐந்து வகுப்புகளும் ஒரே ஒரு கட்டிடத்தில் மட்டுமே செயல்படும் சூழல். ஐந்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் பாடம் நடத்துவது சிரமமாக இருந்தது. மதியம் சத்துணவையும் இதே கட்டிடத்தில்தான் போட வேண்டிய நிலைமை. இதனால், போதிய கட்டிட வசதிகள் இல்லாமல் தவித்துவந்துள்ளனர். இந்நிலையில், கரூர் மற்றும் கோவை பகுதிகளில் எண்ணற்ற தொழில்களை செய்து வரும் பிரபல தொழிலதிபர் எல்.ஜி பாலகிருஷ்ணன் விஜயகுமாரை சந்தித்து தலைமை ஆசிரியர் மூர்த்தி கோரிக்கை வைக்க, தொட்டியப்பட்டி பள்ளிக்கு கட்டிடம் கட்ட பத்தரை லட்ச ரூபாயைக் கொடுத்து அசத்தி இருக்கிறார். அந்த கட்டட வேலைகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.
இதுதொடர்பாக, நம்மிடம் பேசிய பள்ளியின் தலைமை ஆசிரியர் மூர்த்தி, "ஸ்பான்ஸர்களை பிடித்து பள்ளியில் பல வசதிகளை ஏற்படுத்தினோம். இதனால், பல பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் படித்த தங்கள் பிள்ளைகளை இங்கே கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால், போதிய கட்டிட வசதிகள் இல்லாமல் அல்லாடி வந்தோம். அதனால், எல்.ஜி பாலகிருஷ்ணன் விஜயகுமார் சாரை தொடர்ச்சியா சந்தித்து, எங்க பள்ளி கட்டிட பிரச்னையைத் தெரிவித்தோம். அதனைத் தொடர்ந்து, எங்க பள்ளிக்கு கட்டிடம் கட்ட பத்தரை லட்ச ரூபாயை கொடுத்து எங்களை வியப்பில் ஆழ்த்தினார். தமிழக அளவில் ஒருத்தர் அரசுப் பள்ளி கட்டிடம் கட்ட இவ்வளவு தொகையை கொடுத்தது எனக்குத் தெரிந்து இதுதான் முதல்முறை. அவருக்கு என்றென்றைக்கும் கடமைப்பட்டிருக்கிறோம்.
இந்த தகவலை சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சாரை சந்தித்து சொன்னோம். மகிழ்ச்சியான அவர், 'அரசுப் பள்ளி கட்டடம் கட்ட இவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க உண்மையில் பெரிய மனது வேண்டும். அது எல்.ஜி பாலகிருஷ்ணன் விஜயகுமாருக்கு உள்ளது. அவருக்கு வாழ்த்துகள்'ன்னு பாராட்டினார். கட்டிட வேலைக் கிட்டத்தட்ட முடிஞ்சுட்டு. இதன் திறப்பு விழாவை விமர்சையாக கொண்டாட இருக்கிறோம்" என்றார்.

 தொழிலதிபர் எல்.ஜி பாலகிருஷ்ணன் விஜயகுமாரிடம் பேசினோம், "உண்மையில் கல்வியில் தமிழகம் தன்னிறைவு அடைஞ்சா, எல்லா துறைகளும் மேம்படும். மாநிலமும் வளர்ச்சியடையும். அதுவும், குறிப்பாக ஏழை மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகள் தரம் உயர்ந்தால், கல்வியின் தரமும் உயரும். அதற்காகத்தான் அரசுப் பள்ளிக்கு உதவினேன். மற்றபடி நான் பெருசா எதுவும் செஞ்சுடலை" என்று தன்னடக்கத்துடன் தெரிவித்தார்.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post