மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளுக்காக புதிதாக கொண்டுவரப்படும் கேள்விகளின் மாதிரி மற்றும் மதிப்பெண்கள் மாற்றம் குறித்த விவரங்களை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாவது, விடைத்தாள் திருத்துவதில் குளறுபடிகள் தொடர்ந்து நடந்து பெரும் சர்ச்சைகளை உருவாக்கி வந்தன. இந்நிலையில், கேள்வித்தாள் அச்சிடுவதில் தொடங்கி தேர்வு நடத்தி முடிப்பது வரை கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சிபிஎஸ்இ தற்போது செய்து வருகிறது. அத்துடன் அனைத்து தேர்வுகளையும் ஒரே நேரத்தில் நடத்துவதை தவிர்த்து தொழில் கல்வி, பொதுக்கல்வி பாடங்களை தனித்தனியாக நடத்தவும் முடிவு செய்துள்ளது. அதேபோல தேர்வில் மாணவர்கள் தேர்ச்சிக்கான மதிப்பெண்களிலும் மாற்றம் செய்துள்ளது. இதற்காக கணக்கு, ஆங்கிலம், அறிவியல் பாடத் தேர்வுகளில் இடம் பெறும் கேள்வித்தாளில் சில மாற்றங்களை செய்துள்ளது.
மாற்றம் செய்யப்பட்ட கேள்வித்தாள் மாதிரிகள் cbseacademic.in என்ற இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. அத்துடன் அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்களையும் அதிகரித்துள்ளது. சிபிஎஸ்இ சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின்படி அகமதிப்பீட்டு வாய்ப்புகள் 33 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கொண்ட பட்டியல்கள் மேற்கண்ட இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் , பொதுமக்கள் தரப்பில் இருந்து வந்த கருத்துகளை அடிப்படையாக கொண்டு மேற்கண்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அதனால், புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள மாதிரி கேள்வித்தாள்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
Post a Comment