Title of the document



தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் மூலம் ஆண்டுதோறும் வழங்கப்படும் அறிவியல் அறிஞர் விருதுகள் 20 பேருக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது. உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு அம்சமான அறிவியல் விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த அறிவியல் அறிஞர்களை தேர்வு செய்து வழங்கப்பட்டு வருகிறது.

அதில் வேளாண் அறிவியல், உயிரியல், வேதியியல், சுற்றுச் சூழலியல், பொறியியல் தொழில்நுட்பம், கணக்கியல், மருத்துவம், இயற்பியல், கால்நடை அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய 10 பிரிவுகளின் கீழ் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மேற்கண்ட அறிவியல் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இதையடுத்து, கடந்த 2016, 2017ம் ஆண்டுகளுக்கான அறிவியல் அறிஞர் விருதுக்கான தகுதியுள்ள நபர்களை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் பட்டியலிட்டுள்ளது. 2016க்கான விருதுப் பட்டியலில், வேளாண் அறிவியல் கோவை வேளாண் பல்கலை பேராசிரியர் நக்கீரன், உயிரியலுக்கு சென்னை பல்கலைக் கழக பேராசிரியர் மதிவாணன், வேதியியலுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பேராசிரியர் ரமேஷ், சுற்றுச்சூழல் அறிவியலுக்கு சேலம் பெரியார் பல்கலை பேராசிரியர் அன்பழகன், பொறியியல் தொழில்நுட்பவியலுக்கு சென்னை அண்ணா பல்கலைக் கழகப் பேராசிரியர் கண்மணி, கணிதவியலுக்கு திண்டுக்கல் காந்திகிராமிய கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் உதயகுமார், மருத்துவவியலுக்கு கோவை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வெற்றிவேல் செழியன், இயற்பியலுக்கு சென்னை அண்ணா பல்கலைக் கழக இயக்குநர் ஜெயவேல், கால்நடைவியலுக்கு நாகை மீன்வள பல்கலைக்கழக இயக்குநர் ஜெயசேகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல, மேற்கண்ட துறைகளுக்கு 2017ம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் கோவை வேளாண் பல்கலை பேராசிரியர் ரவீந்திரன், சென்னை இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மைக்கேல் கிரோமிகா, காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக பேராசிரியர் கருப்புசாமி, சென்னை அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர் வாசுதேவன், சென்னை, ஆவடி காம்பாட் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறையின் இயக்குநர் சிவக்குமார், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக பேராசிரியர் அன்பழகன், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி இயக்குநர் லட்சுமி நரசிம்மன், திருச்சி பாரதிதாசன் பல்கலை பேராசிரியர் ஜெகந்நாதன், கோவை மகளிர் மனையியல் உயர்கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் கவுசல்யா, மேச்சேரி செம்மறி ஆடு ஆய்வு மையத்தின் பேராசிரியர் திருவேங்கடன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட 20 பேருக்கும் தமிழக அறிவியல் அறிஞர் விருதுப் பட்டயம் மற்றும் ரொக்கம் ரூ.50 ஆயிரம், வழங்கப்படும். இந்த விருதுகள் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்றம் பின்னர் அறிவிக்கும் தேதியில் வழங்கப்படும்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post