Title of the document

ஆசிரியர் தகுதித் தேர்வின் ("டெட்') பாடத்திட்டம் மாற்றப்பட்டு, நிகழ் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வை நடத்த பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
 மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி நாடு முழுவதும், ஆசிரியர் பணிக்கு "டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு அமலாகி உள்ளது. தேசிய கல்வியியல் ஆராய்ச்சிக் கவுன்சில் உத்தரவின்படி, தமிழகத்தில் இந்தத் தேர்வு கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.
 பள்ளி கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2017 பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட்டது.
இதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நிகழ் கல்வியாண்டில், அக்டோபர், 6, 7-ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிக்கை, ஜூலையில் வெளியாகும் என ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு முறைகேடு பிரச்னைகளால் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தேர்வு பணிகள் முடங்கின. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்தத் தேர்வை, தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்த பழைய பாடத்திட்டப்படி நடத்தாமல், தற்போது அறிமுகமாகியுள்ள புதிய பாடத்திட்டப்படி நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 இது குறித்து கல்வியாளர்கள் கூறுகையில், மாறிவரும் சூழலுக்கேற்ப தேர்வு முறையிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியமாகிறது. தற்போதைய சூழலில் பழைய பாடத்திட்டப்படி ஆசிரியர்களைத் தேர்வு செய்தால் பெற்றோர் கல்வி மீது கொண்டுள்ள எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது கடினம். புதிய பாடத்திட்டத்தின்படி ஆசிரியர்களைத் தேர்வு செய்தால்தான் பணிக்கு வருவோர் சிறப்பாக பாடம் நடத்த முடியும் என்றனர்.
 இதைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு, தமிழக அரசின் புதிய பாடத்திட்டப்படி, கேள்விகளைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித் துறை இயக்குநர் தலைமையிலான குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post