
காமராஜரின் நினைவு நாளை ஒட்டி முன்னாள் மாணவர்கள், ஊர் மக்கள், இந்திய உடல்நல உதவி மற்றும் நடைப்பயிற்சி அமைப்பு சார்பில் உருமாண்டம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் இலவச காலை உணவுத் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
கோவை, துடியலூர் அருகே உள்ள உருமாண்டம்பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 60 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் இரண்டு ஆசிரியர்களும் அனைத்து வித கட்டமைப்பு வசதிகளும் இருந்தபோதும் மாணவர் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது.
இதையடுத்து மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யு.ஆர்.கிருஷ்ணன் தலைமையில், ஏ.குமாரசாமி, யு.கே.பாபு, ஆடிட்டர் ஜி.ராமசாமி ஆகியோர் முன்னிலையில் முன்னாள் மாணவர்கள், ஊர்மக்கள் மற்றும் இந்திய உடல்நல உதவி மற்றும் நடைப்பயிற்சி அமைப்பு சார்பில் காலை உணவுத் திட்டம், திருவள்ளுவர் சிலை திறப்பு விழா, மரக்கன்றுகள் நடும் விழா, பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அப்போது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை தொழிலதிபர் சி.கே.கண்ணன் தொடங்கி வைத்து கூறியதாவது:
அரசுப் பள்ளியில் அனைத்துத் தரப்பு மக்களும் தங்களது குழந்தைகளை படிக்க வைக்க முன்வர வேண்டும் என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். அதன் ஒருபகுதியாக மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய காமராஜரின் நினைவு நாளில் மாணவர்களுக்கு இலவச காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். விடுமுறை நாள்கள் தவிர பிற நாள்களில் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு காலையில் சத்தான உணவு வகைகள் வழங்கப்படும் என்றார்.
إرسال تعليق