Title of the document
அரக்கோணத்தை அடுத்த மோசூர் அரசு உயர்நிலைப் பள்ளியில்

ரூ. 4.65 லட்சம் மதிப்பில்  பல்வேறு நல உதவிகளை தனது சொந்த நிதியில் செய்து கொடுத்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் எம்.ஜி.பிச்சாண்டியை மாவட்டக் கல்விஅலுவலர் குணசேகரன் பாராட்டினார்.
அரக்கோணம் அருகே உள்ள மோசூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் எம்.ஜி.பிச்சாண்டி (80). இவர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.
தற்போது பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழக கெளரவத் தலைவராகவும், கல்வி வளர்ச்சிக் குழுத் தலைவராகவும் உள்ளார்.
மோசூரை தனது சொந்த கிராமமாகக் கொண்ட எம்.ஜி.பிச்சாண்டி, இப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக இருந்தபோது இதை மேல்நிலைப் பள்ளியாக மாற்றக் கோரி அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையான ரூ. 2 லட்சத்தை தனது சொந்த நிதியில் இருந்து செலுத்தினார். மேலும், பள்ளியில் கணினி ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்ததால், பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியருக்கு ஒரு வருடத்துக்கு மாதம் ரூ. 3ஆயிரத்தை அளித்தார்.
 பள்ளியில் காலியாக இருந்த அலுவலக இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு அரசு அனுமதி பெற்று தற்காலிகமாக ஒரு நபரை நியமித்து, அவருக்கு ஓராண்டுக்கு தனது சொந்த நிதியில் சம்பளம் வழங்கினார்.
கடந்த 1990 ஆண்டு பள்ளிக்கு கலையரங்கம் கட்டித் தந்துள்ளார். பள்ளிச் சுற்றுசுவர் பழுதடைந்திருந்த நிலையில், ரூ. 30 ஆயிரம் மதிப்பில் அச்சுவரைச் சீர்படுத்தினார்.
 இதுவரை இப்பள்ளிக்காக மொத்தம் ரூ. 4.65 லட்சத்தை எம்.ஜி.பிச்சாண்டி தனது சொந்த நிதியிலிருந்து செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரூ. 75 ஆயிரத்தில் பள்ளிக்கு நுழைவு வாயிலை கட்டிக்கொடுத்துள்ளார்.
 இதன் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏ.பியூலாஅம்பிகா தலைமை வகித்தார்.
பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் சதாசிவம் வரவேற்றார்.
 நுழைவு வாயிலை மாவட்டக் கல்வி அலுவலர் கே.குணசேகரன் திறந்து வைத்து எம்.ஜி.பிச்சாண்டிக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். தொடர்ந்து, 60 மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் எம்.ஜி.பிச்சாண்டி நட்டுவைத்தார்.
பள்ளிக்கு பல்வேறு நல உதவிகளை செய்து கொடுத்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் எம்.ஜி.பிச்சாண்டியை மோசூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள், பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் வாழ்த்தினர்.
இதுகுறித்து எம்.ஜி.பிச்சாண்டி கூறுகையில், இப்பள்ளியை செம்மையாக்கும் முயற்சியில் தனது இறுதி காலம் வரை ஈடுபடுவேன் என தெரிவித்தார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post