கேரம் போட்டிகளில் கலக்கும் அவ்வூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள்!

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரியை அடுத்துள்ள அவ்வூர் என்ற இடத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் சுமார் 80 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களின் பெற்றாேர் தாேட்டத் தொழிலாளர்களாகவும், தினக் கூலிகளாகவும் வேலை செய்யும் நிலையில், பெரும்பாலான மாணவர்கள் முதல் தலைமுறை கல்வி பயின்று வருகின்றனர்.
அவ்வூர் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி மாணவர்கள் பேச்சு, ஓவியம், கவிதை, இசை, சிலம்பம் என பல்வேறு போட்டிகளில் திறன்களை வளர்த்து, சிறப்பாகச் செயல்பட்டு சாதித்து வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளாக மாவட்ட அளவிலான கேரம் போட்டிகளில் முதல் இடம் பிடித்து, மாநில போட்டிக்கு தகுதி பெற்று வருகின்றனர். இந்நிலையில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான ஜூனியர் பிரிவு கேரம் பாேட்டி, கடந்த 5ம் தேதி ஊட்டியில் நடந்தது. இதில் சிறப்பாக செயல்பட்ட அவ்வூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 4ம் வகுப்பு மாணவன் தமிழரசு (ஒற்றையர்), 5ம் வகுப்பு மாணவர்கள் சுதீப், நிதிஷ் (இரட்டையர்), மாணவிகள் எழில்மதி (ஒற்றையர்), ரேஷ்மா, ராஜேஸ்வரி (இரட்டையர்) என 6 மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில பாேட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து அவ்வூர் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிகுமார் கூறுகையில்,‛‛ கடந்த 6 ஆண்டுகளாக ஜூனியர் பிரிவு கேரம் பாேட்டிகளில், மாணவர்கள் சிறப்பாகச் செயல்பட்டு மாநிலப் போட்டிக்கு தேர்வாகி வருகின்றனர். தற்போது தேர்வாகியுள்ள 4ம் வகுப்பு மாணவன் தமிழரசு தாெடர்ந்து இரண்டாவது முறையாகவும், மாணவி எழில்மதி மூன்றாம் முறையாகவும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். மேலும், சீனியர் மாணவர்களுக்கான மாநில கேரம் பாேட்டிக்குத் தேர்வாகியுள்ள கீழ் கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி கீதா (ஒற்றையர்), 7ம் வகுப்பு மாணவன் பரணிதரன் (ஒற்றையர்), 6ம் வகுப்பு மாணவிகள் நிகிதா, பவதாரிணி (இரட்டையர்) நால்வரும் எங்கள் பள்ளியில் படித்த மாணவர்கள்தான். அதேபோல கடந்த பல ஆண்டுகளாக மாநில போட்டிக்கு தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வாகி வந்த நிலையில், இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் இருந்து மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ள 12 மாணவர்களும் அரசுப் பள்ளி மாணவர்கள், அதிலும் 10 மாணவர்கள் கீழ் கோத்தகிரியை சேர்ந்தவர்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார்.

0 Comments:

Post a Comment