ஆசிரியர்கள் மீது தொடர் தாக்குதல்: பணிப் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்கக் கோரிக்கை


ஆசிரியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த தனியாக பணிப் பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் ஆ. ராமு, தமிழக முதல்வருக்கு வியாழக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
திருவண்ணாமலை மாவட்டம், மேல்நாச்சிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 22- ஆம் தேதி பள்ளி வேலை நேரத்தில் பள்ளி வகுப்பறைக்குள் அத்துமீறி புகுந்து பாடம் நடத்திக் கொண்டிருந்த கண்ணன் என்ற ஆசிரியரை தாக்கி கொலை செய்ய முயன்ற வெளி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை
வரவேற்கிறோம்.
சம்பந்தப்பட்டவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாதபடி கடுமையான நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.
விதிமுறைகளுக்கு முரணான தனது பள்ளி செயல்பாடுகள் ஆசிரியர் மூலம் பெற்றோருக்கு தெரிந்தால் கண்டிப்பார்கள் என்ற அச்சத்தாலும், தனது தவறுகளை மறைப்பதற்கும், தன்னை குறை சொன்ன ஆசிரியர் மீதே பெற்றோர்களிடம் தவறாக புகார் கூறும் செயல் அண்மைக் காலமாக பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது.
பிள்ளைகள் பெற்றோரிடம் ஆசிரியரைப் பற்றி தவறாக புகார் கூறும் பொழுது பெற்றோர் உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியரிடமோ, பள்ளி சார்ந்த கல்வி மாவட்ட அதிகாரிகளிடமோ புகார் கொடுக்கலாம். அதிகாரிகளின் விசாரணையில் ஆசிரியர் தவறு செய்து இருந்தால்
தண்டனை வழங்கலாம்.
அவ்வாறு இல்லாமல் தன் பிள்ளையின் புகாரை அப்படியே ஏற்றுக் கொண்டு யாரிடமும் விசாரிக்காமல் பள்ளி நேரத்தில் வகுப்பறையில் புகுந்து பெற்றோர்களும், உறவினர்களும் ஆசிரியரை கண்மூடித்தனமாக தாக்குவதை கடுகளவும் ஏற்க முடியாது.
இதுபோன்ற செயல்கள் இனிவரும் காலங்களில் தமிழகமெங்கும் நடைபெறாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.  அரசு ஊழியர்கள் அலுவலகத்தில் பணியில் இருக்கும் பொழுது வெளி நபர்களால் தாக்கப்பட்டால் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல சட்டப் பிரிவுகள் இருந்தாலும், மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் தனியாக பாதுகாப்புச் சட்டத்தை அரசு இயற்றி நடைமுறைப்படுத்தி இருப்பதை போல, ஆசிரியர்களுக்கும் பள்ளிகளுக்கும் தனியாக பணிப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.