Title of the document
மாணவர்கள் விரும்பும் துறையில் சாதிக்க வேண்டும் என்றால், தங்களது துறையில் அயராது உழைத்தால் எளிதாக வெற்றி பெற முடியும் என இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
திருவள்ளூர் அருகே பாண்டூரில் உள்ள இந்திரா கல்விக் குழுமத்தின் சார்பில் திங்கள்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அக்குழுமத்தின் தலைவரும், திருவள்ளூர் சட்டப் பேரவை உறுப்பினருமான வி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் இந்திரா கல்வி மற்றும் அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குநர் இந்திரா ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
இந்த விழாவில் இஸ்ரோ அமைப்பின் முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசியது:
தற்போது, கல்லூரிப் படிப்பு முடிந்து பட்டம் பெற்று மாணவர்கள் வெளியேறிச் செல்கிறீர்கள். பட்டதாரிகளுக்கு இக்காலத்தில் வேலையில்லை என்பது செய்தியாக உள்ளது. அதேசமயம், வேலைக்கு திறமையான பட்டதாரிகள் கிடைக்காத நிலையும் உள்ளது. அதனால், பணி வாய்ப்புக்கான திறனையும், தகுதியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு மாணவர்கள் அயராது உழைத்தால் கட்டாயம் வெற்றி பெற முடியும்.
மேலும், நீங்கள் விரும்பும் துறையில் சிறந்து விளங்கவும், பணியைத் தக்க வைத்துக் கொள்ளவும் வாழ்நாள் முழுவதும் புதிது, புதிதாக கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். நான் தொடக்கத்தில் விரும்பியது கிடைக்காததால், கிடைத்தவற்றை விரும்பினேன். இஸ்ரோவில் நான் பணியாற்றிய அனுபவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இத்துறையில் இன்னும் அதிகம் சாதிக்க விரும்பினேன். அதன் அடிப்படையில் தற்போது, மாதந்தோறும் விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சந்திரயான்-2 செயற்கைக்கோள் இம்மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. கடும் உழைப்பு, உயர்ந்த லட்சியம், தேவையான திறன் ஆகியவை இருந்தால் நிலவுக்கு செல்வது கூட கடினமல்ல. நான் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றேன். அதன் பிறகு தற்போது வீட்டில் இருக்கவில்லை. இதுவரையில் 1 லட்சம் கி.மீ. பயணம் செய்து, 50 ஆயிரம் மாணவ, மாணவிகளை சந்தித்து நம்பிக்கை ஏற்படுத்தும் மகத்தான பணியில் ஈடுபட்டு வருகிறேன் என்றார் அவர்.
அதைத் தொடர்ந்து, பொறியியல் பட்டதாரிகள் 350 பேர் மற்றும் கல்வியியல் கல்லூரி (பி.எட்) மாணவர்கள் 100 பேர், எம்.எட் பட்டதாரிகள் 50 பேர் என மொத்தம் 500 பேருக்கு அவர் பட்டங்களை வழங்கினார்.
விழாவில், பேராசிரியர் சிவகுமார், இந்திரா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் என்.வேல்விழி, இந்திரா கல்வியியல் கல்லூரியின் முதல்வர் ராதிகா வித்யாசாகர், தொழிலதிபர் பாபு, பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post