Click Below Image To Join WhatsApp Group
KALVINEWS OFFICIAL ANDROID APP பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

C மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா!


பள்ளி மாணவர்கள் அணிந்துவரும் உடைகளினால், அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு வந்துவிடக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டதே சீருடை. இந்த நடைமுறை அரசுப் பள்ளிகளில் மட்டுமல்லாது, தனியார் பள்ளிகளிலும் பின்பற்றப்படுகிறது. அதேபோல, மதிப்பெண்  அடிப்படையில், மாணவர்களின் திறனை அளவிடும் முறை குறித்தும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. அதுகுறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. ஆயினும், மாணவர்களின் கற்றல்திறனை ஆசிரியரும் பெற்றோரும் அறிந்துகொள்ள ஓர் அளவிடும் முறை தேவைப்படுகிறது. செயல்வழிக் கற்றலில், கிரேடு முறையைப் பின்பற்றுகிறார்கள். ஆனபோதும், ஏ1 கிரேடு பெற்ற மாணவரைப் பார்த்து, கடைசி கிரேடு மாணவர் ஏக்கம்கொள்வது தவிர்க்கமுடியாதது அல்லவா. அந்த ஏக்கம், அந்த மாணவரை மற்றவர்களிடமிருந்து தனித்துவிடக் கூடாது. அதற்காக, புதிய முறையைக் கையாள்கிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஓர் ஆசிரியர்.
திண்டுக்கல், பாரதிபுரம், சௌராஷ்டிரா ஸ்ரீ வரதராஜா தொடக்கப் பள்ளியின் ஆசிரியர், ஜெ.சுரேஷ் பாபு. ``நான் இந்தப் பள்ளியில் 9 ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறேன். வகுப்பறை என்பது, மாணவர்களும் பேசும்விதமான ஜனநாயகம் நிறைந்து இருப்பதே சரியானது என நினைப்பவன். பாடங்களை உரையாடலாக நடத்தவும் செய்வேன். மாணவர்களுக்குப் பாடத்தில் ஏதேனும் சந்தேகம் வரும்பட்சத்தில், கொஞ்சமும் தயங்காமல் எழுந்து கேட்பார்கள். இந்தச் சூழல்தான் கற்றுக்கொள்வதற்கு மட்டுமன்றி, கற்றுக்கொடுக்கவும் ஏற்றதாக இருக்கும்.
தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் செயல்வழிக் கற்றல் முறையில், தியரிக்கு 60 மதிப்பெண்; செயல்பாடுகள் உள்ளிட்டவற்றுக்கு 40 மதிப்பெண் வழங்கப்படுகின்றன. அவையும் கிரேடு முறையில்தான் அளிக்கப்படுகின்றன. A1 கிரேடு பெற்ற மாணவர்களுக்கு, வகுப்பின் பிற மாணவர்கள் கைதட்டி வாழ்த்துகளைத் தெரிவிப்பார்கள். ஆனால், A1 கிரேடு மாணவர்களைப் பாராட்டும் அதேநேரம், நன்கு படித்தும் ஏதேனும் சூழலில் அடுத்தடுத்த கிரேடு பெற்ற மாணவர்களின் மனமும் தொய்வடைந்துவிடக் கூடாது என முடிவெடுத்தேன். எங்கள் வகுப்பில் D கிரேடு வாங்கிய மாணவர்கள் யாருமில்லை. C கிரேடு பெற்ற மாணவர்கள் சிலர் இருந்தனர். எனவே, அவர்கள் மூலம், A1 கிரேடு பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களைத் தரச் சொன்னேன்" என்கிறார் சுரேஷ் பாபு.
``அப்படிச் செய்தால் C கிரேடு வாங்கிய மாணவர்களிடம் தாழ்வுமனப்பான்மை உருவாகிவிடும் அல்லவா?" என்றேன்.
``நீங்கள் கேட்பதுபோலவே பலரும் கேட்டனர். இது, பெற்றோர்களும் பொதுமக்களும் கூடி நிற்கும் பெரிய விழா அல்ல. அங்குதான் அந்தக் கைதட்டல் மனதுக்குள் பெரும் ஏற்றத்தாழ்வை உருவாக்கிவிடும். வகுப்பில் எங்களுக்குள் நாங்கள் கைகுலுக்கிக்கொள்வதைப் போலத்தான் இது. ஒவ்வொரு மாணவரின் பெயர் மட்டுமன்றி, அவர்களின் மனநிலையையும் அறிந்தவன் என்கிற வகையில், இதைக் கவனமாகக் கையாண்டேன். C கிரேடு பெற்ற மாணவர்கள், செயல்பாடுகளை அட்டகாசமாகச் செய்திருப்பார்கள். அதை வியந்து பாராட்டுவேன். தியரி எழுதும்போது, என்ன பிரச்னை என்பது பற்றிப் பகிர்ந்துகொள்ளச் சொன்னேன். அதற்கு என்ன தீர்வு என்றும் விவாதிப்போம். இப்படிப் பல விஷயங்களை உள்ளடக்கித்தான் செய்தேன். அதனால், C கிரேடு வாங்கிய மாணவர்களுக்கு நிச்சயம் தாழ்வுமனப்பான்மை வரவில்லை. மாறாக, A கிரேடு வாங்கியவர்களோடு சேர்ந்து குழுவாகப் படிக்கும் பழக்கம் வந்துள்ளது. இதனால், மதிப்பெண் சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் மறந்து, தன்னம்பிக்கை பெறுகின்றனர்" என்கிறார்.
புதிய கோணத்தில் ஒரு செயலை அணுகி, அதன்படி இயங்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைச் சொல்வோம்!

0 Comments:

Post a Comment