தினந்தோறும் நடத்தும் தேர்வால் மனஉளைச்சல் ’- எதிர்த்து போராட்டம் நடத்த ஆசிரியர்கள் முடிவு


தினமும் நடத்தும் தேர்வால், ஆசிரியர்கள், மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாகக் கூறி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை முதன்மைக் கல்வி அலுவலருக்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் கல்வி துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த செப்டம்பரில் நடந்த காலாண்டு தேர்வில் 10, பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் அந்தந்த பள்ளியில் திருத்தி மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது. திடீரென்று அனைத்து பள்ளியின் விடைத்தாள் மீண்டும் மறுமதிப்பீடு செய்யப்பட்டது. ஒரு பள்ளியின் விடைத்தாளை மற்றொரு பள்ளியில் கொடுத்து மறுமதிப்பீடு செய்த போது  மதிப்பெண் குறைவாகவும், கூடுதலாகவும்  போடப்பட்டிருந்தது தெரிந்தது. இதில் கவனக்குறைவாக விடைத்தாள் திருத்தியதற்கான விளக்கம் ஆசிரியர்களிடம் கேட்கப்பட்டது. தற்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தினமும் வகுப்பில் தேர்வு நடத்த முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இதனால் ஆசிரியர்கள் வகுப்பில் தினமும் தேர்வு மட்டுமே நடத்துவதால், பாடம் நடத்த முடியவில்லை. புதிய பாடத்திட்டம் என்பதால், மாணவர்கள் பாடத்தை முறையாக படிக்க முடியாமல் தவிக்கின்றனர்.  
 இதுதொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சரவண முருகன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் பிரபாகரன், நவநீதகிருஷ்ணன், சோலைராஜா, மாவட்ட நிர்வாகிகள் சதிஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட தலைவர் சரவணமுருகன் பேசும்போது, ‘‘காலாண்டு விடைத்தாள் ஆய்வு, மாற்றுப்பணி போன்ற செயல்பாடுகளால்  மேல்நிலை ஆசிரியர்களின் கற்பித்தல் பணிகள் பாதிப்படைகிறது. தினந்தோறும் தேர்வால் ஆசிரியர்கள், மாணவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  எந்த மாவட்டத்திலும் இல்லாத  நடைமுறையை முதன்மைக் கல்வி அலுவலர் நடைமுறைப்படுத்துகிறார். அவரின் தன்னிச்சை செயல்பாடுகளை முழுமையாய்  எதிர்க்கிறோம். இதை பள்ளி கல்வி  அமைச்சர், செயலர், இயக்குநர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். தினந்தோறும் தேர்வு முறையை ரத்து செய்யுமாறு அவரிடம் கோருவோம். அவர் ஏற்க மறுத்தால், மாவட்ட அளவில் அனைத்து ஆசிரியர்களையும் ஒன்று திரட்டி அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவது என தீர்மானித்துள்ளோம்’’ என்றார்.

0 Comments:

Post a Comment