Title of the document



காடையாம்பட்டி அருகே பள்ளிக்கு தாமதமாக வந்ததை, ஆசிரியை கேட்டதால் ஆத்திரமடைந்த 8ம் வகுப்பு மாணவர், கையில் கிடைத்த பொருட்களை ஆசிரியை மீது வீசி தாக்குதல் நடத்தினார். இது தொடர்பாக ஓமலூர் போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தினர்.



சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே பொட்டியபுரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 200 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 8 ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். தலைமை ஆசிரியையாக புவனேஸ்வரி உள்ளார். இவருக்கும், அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை கிரிஜாவிற்கும் இடையே, வகுப்புகள் நடத்துவது தொடர்பாக முன்விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, ஆசிரியர்கள் இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் தலைமை ஆசிரியை புவனேஸ்வரியும், ஆசிரியை கிரிஜாவும் அவ்வப்போது மோதிக்கொள்வர்.

இது பற்றிய தகவல் அறிந்த கிராம மக்கள், ஆசிரியைகளின் மோதலால் தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக கூறி, உடனடியாக இருவரையும் வெவ்வேறு பள்ளிக்கு மாறுதல் செய்யுமாறு உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.



ஆனால், இதுபற்றி கண்டு கொள்ளாமல் அதிகாரி காலதாமதம் செய்து வந்தார். இதனால், இருவரும் மாணவர்களை தூண்டி விட்டு, அவ்வப்போது தங்களுடைய வன்மத்தை தீர்த்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று காலை பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், பள்ளிக்கு தாமதமாக வந்தார். அப்போது வகுப்பு ஆசிரியை கிரிஜா, அந்த மாணவரை ஏன் தாமதமாக வந்தாய் என கேட்டு கண்டித்துள்ளார். மேலும், பெஞ்ச் மீது ஏறி நிற்குமாறு கூறினார்.

இதனால் ஆவேசமடைந்த அந்த மாணவர், தான் கையில் வைத்திருந்த தேர்வு அட்டை, தன்னுடைய பேக் மற்றம் கையில் கிடைத்த பொருட்களை ஆசிரியை மீது வீசியெறிந்து தாக்குதல் நடத்தினார்.

மேலும், ஆசிரியையை ஆபாசமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பள்ளிக்கு வந்த போலீசார், தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர்கள் இடையே கோஷ்டி மோதல் இருப்பதும், அதன் எதிரொலியாக மாணவர்கள் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவரை அழைத்து போலீசார் எச்சரித்தனர். பின்னர், வகுப்பு ஆசிரியை கிரிஜாவிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. வகுப்புக்கு தாமதமாக வந்ததை கண்டித்த ஆசிரியையை, மாணவர் தாக்கிய சம்பவம் ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post