காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தாத 5 அரசுப் பள்ளிகளுக்கு எச்சரிக்கைதிண்டுக்கல் மாவட்டத்தில் காலாண்டு தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தாத 5-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. அப்போது அரசு விடுமுறை நீங்கலாக பிற நாள்களில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆனால், சில அரசுப் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யவில்லை. மேலும், விடுமுறை நாள்களில் வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் பிரசாரம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தவில்லை என புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, புகார் அளிக்கப்பட்ட நத்தம் பகுதியைச் சேர்ந்த 4 அரசுப் பள்ளிகள் மற்றும் கன்னிவாடி பகுதியிலுள்ள 1 அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
இதுதொடர்பாக கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியது: திண்டுக்கல் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளிலிருந்து மட்டும் சிறப்பு வகுப்பு நடத்தவில்லை என புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், நத்தம் வட்டாரத்தில் மாவட்ட கல்வி அலுவலர் மூலம் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, நத்தம் பகுதியிலுள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் முழுமையாக சிறப்பு வகுப்புகள் நடைபெறவில்லை என கண்டறியப்பட்டது. மாவட்டம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 5 பள்ளிகளின் தலைமையாசிரியர்களை அழைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

0 Comments:

Post a Comment