Title of the document

மருத்துவப் படிப்பில் சேர தகுதி இருந்தும் மாணவிக்கு இடம் மறுத்த கல்லூரி நிர்வாகத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும், வரும் கல்வி ஆண்டில் அந்த மாணவிக்கு இடம் ஒதுக்கீடு செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு என்ன?: சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த மாணவி மிதுனா தாக்கல் செய்த மனுவில், நான் 2018-2019 ஆம் கல்வி ஆண்டில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் 156 மதிப்பெண்கள் பெற்றேன். புதுச்சேரி அரியூரில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்தேன். நிர்வாக ஒதுக்கீட்டு இடத்துக்காக ரூ.16 லட்சத்தை வரைவோலையாக சென்டாக் அமைப்புக்குச் செலுத்தி கலந்தாய்வில் கலந்து கொண்டேன். எனினும், எனக்கு இடம் ஒதுக்கப்படவில்லை. 
எனவே, எனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு சென்டாக் அமைப்பு இடம் ஒதுக்க வேண்டும். இதற்காக வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. 
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மனுதாரருக்கு கல்லூரி நிர்வாகம் இடம் ஒதுக்கவில்லை. சென்டாக் அனுப்பிய பட்டியலில் இருந்து மாணவர்களைத் தேர்வு செய்து காலி இடங்களை நிரப்பாமல், கல்லூரி நிர்வாகம் தயார் செய்த பட்டியலில் இருந்து மாணவர்களைத் தேர்வு செய்து இடங்களை நிரப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மாணவர் சேர்க்கை முடிவடைந்த பின்னர்தான் உயர் நீதிமன்ற உத்தரவு கிடைத்ததாகவும், இதன் காரணமாக மனுதாரருக்கு இடம் ஒதுக்க முடியவில்லை என கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு: இந்த வழக்கை விசாரித்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை கல்லூரி நிர்வாகம் மதிக்கவில்லை. மாணவியான மனுதாரருக்கு இடம் ஒதுக்காதது அதிர்ச்சி அளிப்பதோடு, சட்ட விரோதமானது. எனவே, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி நிர்வாகம், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். 
மேலும், புதுச்சேரியில் உள்ள ஏதாவது ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் வரும் 2019-2020-ஆம் கல்வி ஆண்டில் மனுதாரருக்கு நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் இடம் ஒதுக்க வேண்டும். வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான மொத்த இடங்களில் 5 இடங்களைக் குறைக்க வேண்டும். சென்டாக் அனுப்பிய பட்டியலில் இல்லாதவர்களைக் கொண்டு நிரப்பப்பட்ட சேர்க்கையை ரத்து செய்ய இந்திய மருத்துவக் கவுன்சில் அல்லது சென்டாக் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post