விதிகளை மீறி அதிக மாணவர் சேர்க்கை 1,700 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அபராதம்: மத்திய கல்வித்துறை முடிவு


சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான விதிமுறைகளை மீறி ஒரு வகுப்பில் நாற்பதுக்கும் அதிகமான மாணவர்களை  சேர்த்துள்ளதாக 1,700 பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்  என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் இணைப்பு பெற்றுள்ள பள்ளிகள் ஒரு வகுப்பில் 40 மாணவர்களுக்கு மேல் சேர்க்க அனுமதி இல்லை. இருப்பினும் இந்த விதிகளை மீறி அதிகப்படியாக  மாணவர்களை சேர்த்துள்ள பள்ளிகளை கணக்கெடுக்கும் பணியில் சிபிஎஸ்இ ஈடுபட்டது. அதன்படி நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 1700 பள்ளிகள், இந்த விதிகளை மீறி ஒரு வகுப்பில்  40க்கும் அதிகமான மாணவர்களை சேர்த்துள்ளது தெரியவந்துள்ளது. 
இதையடுத்து அந்த பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், அதிகப்படியாக சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களை கணக்கிட்டு தலா ₹500 அபராதம்  விதிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது. அபராதம் கட்டத் தவறும் பட்சத்தில் அந்த பள்ளியின் இணைப்பு ரத்து செய்யவும் முடிவு செய்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம்  பள்ளியில் சேர்க்கை பெற்றுவிட்டு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுவோரின் முறைகேடுகள் தடுக்கப்படும். ஒவ்வொரு பள்ளியும் தங்கள் பள்ளியில் சேர்க்கை பெறும் மாணவர்களின்  தகவல்கள், எத்தனை வகுப்புகள், எத்தனை பிரிவுகள் உள்ளன என்பது போன்ற விவரங்களை சிபிஎஸ்இ தனது தகவல் ெதாகுப்பில் ஆன்லைன் மூலம் தெரிவிக்க வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளது. ஒரு முறை பதிவு செய்த பிறகு அதை மாற்றி அமைக்க எந்த பள்ளிக்கும் அனுமதி இல்லை என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது

0 Comments:

Post a Comment