Title of the document

பெரம்பலூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் பெ.ராஜ்குமார், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் ஈ.ராஜேந்திரன், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலர் ஆ.கமலக்கண்ணன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் ஆர்.செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் கி.மகேந்திரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். தமிழக முதல்வர் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 7ஆவது ஊதியக் குழுவில் அறிவித்த ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஊதியக்குழு முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழு முரண்பாடுகளை முழுமையாக களைந்திட வேண்டும். நிர்வாகத்தை சீர்குலைக்கும் அரசாணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பட்டதாரி ஆசிரியர்களாக வரைமுறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு 7ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு நிர்வாகிகள் பே. பாண்டியன், சி.காந்தி, து.சந்திரசேகர், பெ.மணி, இரா. பாலசுப்ரமணியன், ஆ.கருப்பையா உள்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அரியலூர்: அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன், தமிழக தமிழாசிரியர் கழக மாவட்டச் செயலர் கவுதமன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் எழில், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் மா.நம்பிராஜன் தொடங்கி வைத்தார். திரளான அரசு ஊழியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post