தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் செங்கோட்டையன்


தமிழகத்தில் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்திட தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வெள்ளிக்கிழமை மாலை வந்தார். அவரை கோயில் இணை ஆணையர் பா.பாரதி மற்றும் அலுவலர்கள் வரவேற்றனர்.
முன்னதாக, அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையில் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ஆரம்பிக்கப்பட உள்ளது. கல்வித் துறையில் உருவாக்கப்படும் மாற்றங்கள் மூலம் இந்தியாவிலேயே தமிழகம் திருப்புமுனையை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் காலிப் பணியிடமே இல்லாத நிலையை உருவாக்க பெற்றோர்- ஆசிரியர்கள் சங்கம் மூலம் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்காக அரசாணை கடந்த வாரம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணை மாவட்டத்தோறும் உள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அதனை முதன்மை கல்வி அலுவலர்கள் செயல்படுத்துவார்கள்.
தமிழக பள்ளிகளில் ஆசிரியர்கள், பெற்றோர்களை பொருத்தவரையில் மாணவர்களின் எதிர்கால நலனை கொண்டு செயல்பட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பள்ளிக் கட்டமைப்பை பாதுகாக்கவும், மாணவர்களை வழிநடத்தவும் பெற்றோர்- ஆசிரியர் அமைப்பு உள்ளது. ஒருவேளை ஆசிரியர்களிடம் குறைகள் இருக்குமானால் பெற்றோர்கள் சுட்டிக்காட்டினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

0 Comments:

Post a Comment