Title of the document


பழைய செய்தித்தாள்களைச் சேகரித்து அதை விற்று, அதில் கிடைக்கும் வருவாயில் மாதம் ஒரு பள்ளியில் நூலகம் திறக்க முயற்சி செய்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளார் பொறியியல் கல்லூரி மாணவர் கீர்த்திவாசன்.

திருச்சியைச் சேர்ந்தவர் கீர்த்திவாசன். இவர், சென்னையில் உள்ள வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வருகிறார். இவர், திருச்சியில் உள்ள தனது வீட்டுப் பகுதிகளில் பலரது வீடுகளில் பழைய செய்தித்தாள்களை வாங்கி அவற்றை பென்சில் செய்யும் தொழிற்சாலைக்கு அனுப்பி வருகிறார். அவற்றில் இருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு மாதந்தோறும் ஒரு அரசுப் பள்ளியில் நூலகம் திறக்க முயற்சி செய்து வருகிறார். ஏற்கெனவே காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சிலாவட்டம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூலகத்தைத் திறந்து வைத்துள்ள கீர்த்திவாசன், அடுத்த 3 ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் நூலகத்தைத் திறக்க உள்ளதாகத் தெரிவித்தார்.



இந்த நூலகங்களுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எழுதிய நூல்கள், பாடநூல்களைத் தவிர்த்து குழந்தைகளுக்குத் தேவையான அறிவு சார்ந்த புத்தகங்கள், அறிவியல், வரலாற்று புத்தகங்கள் என பல்வேறு வகை நூல்களை கீர்த்திவாசன் வாங்கித் தருகிறார்.


ஒரு நூலகத்துக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான நூல்களை அளித்து நூலகத்தைத் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து பள்ளி நிர்வாகிகள் அந்த நூலகத்தை நடத்துவோர் மேலும் புரவலர்களைச் சேர்ப்பார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இணையதளத்தில் "யூ டியூபில்' இவரது நூலக திறப்பு நிகழ்ச்சிகளைக் காணும் பல பள்ளி நிர்வாகிகள் தங்களது பள்ளியிலும் வந்து நூலகத்தை ஏற்படுத்தித் தருமாறு அவரை வரவேற்கின்றனர்.

இந்நிலையில் அரக்கோணம் நகராட்சி போலாட்சியம்மன் நடுநிலைப் பள்ளி ஆசிரியை தாமரைச்செல்வி, "யூ டியூப்' மூலம் கீர்த்திவாசனை தொடர்பு கொண்டு தங்களது பள்ளியில் நூலகத்தை ஏற்படுத்தித் தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து சனிக்கிழமை அரக்கோணம் வந்த கீர்த்திவாசன், அப்பள்ளிக்கு புத்தகங்களை வழங்கி, புதிய நூலகத்தைத் திறந்து வைத்தார். ஆசிரியர் குமரவேல் வரவேற்றார். பொதிகை தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தும் "ழகரம் கற்போம்' அமைப்பின் நிர்வாகி வசுமதி புதிய நூல்களை தலைமை ஆசிரியை, ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகளிடம் வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் மரியஜெயசீலி நன்றி கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post