Title of the document

விகடன் இணையத்தளத்தில் , பெற்றோர்களிடம் உங்கள் பிள்ளையை எந்தப் பள்ளியில் சேர்க்கவிருக்கிறீர்கள் என்று ஒரு சர்வே நடத்தினோம் .

அதில் , அரசு அல்லது தனியார் பள்ளியை நிராகரித்ததற்கு என்ன காரணம் , அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சீர் செய்ய வேண்டிய விஷயங்கள் எவை என்பது உட்பட ஆறு கேள்விகளை முன் வைத்திருந்தோம் . அதற்கு மிகுந்த ஆர்வத்துடன் பலரும் பங்கேற்றிருந்தனர் . அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி .
அரசுப் பள்ளி
இந்த சர்வே முடிவுகள் குறித்து , கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சு .மூர்த்தியின் கருத்துகளைக் கேட்டோம் .
சு.மூர்த்தி பொதுமக்கள் இந்த சர்வேயில் ஆர்வத்துடன் பங்கேற்றமை முதலில் நன்றிகள் . இதுபோன்ற உரையாடல் வழியேதான் ஆரோக்கியமான  மாற்றங்களைக் கொண்டு வர முடியும் . சர்வேயின் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே ஆராயாமல்  மக்களின் கருத்துகளைத் தொகுத்து , அவை குறித்து என் பார்வையைப் பதிவு செய்ய விரும்புகிறேன் .
அரசுப்பள்ளிகள் பொதுமக்கள் பலரால் புறக்கணிக்கப்படும் நிலை உருவாக வழிவகுத்தவர்கள் ஆட்சியாளர்கள்தான் . தனியார் பள்ளிகள் பெருக வாய்ப்பளித்தது மட்டுமல்லாமல் அரசுப்பள்ளிகள் சீர்கேடடையவும் வழி வகுத்தார்கள் . ஏற்கனவே இருந்த ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை நலிவடைய வைத்தார்கள் . மாவட்டத்திற்கு ஒரு மாதிரிப்பள்ளிகள் திறக்க  திட்டம் வகுத்தார்கள் . 1966 ஆம் ஆண்டிலேயே கோத்தாரிக் கல்விக்குழு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கல்விக்கு  6% நிதி ஒதுக்கப் பரிந்துரைத்தது . இதுவரை ஒரு நிதி நிலை அறிக்கையில் இது நடக்கவில்லை . கடந்த ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் தற்போது ஆட்சியில் இருக்கும் பா .ஜ .க அரசும்   6% கல்விக்கு நிதி ஒதுக்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறினார்கள் . ஆனால் செய்யவில்லை . அரசாங்கத்தின் கல்விக் கடமை அரிமா சங்கத்தின் நற்பணியைப் போல மாற்றிக்கொண்டார்கள் . வரிப்பணம் செலுத்தும் மக்களுக்குக்  கல்வி  உரிமை எதுவெனத்  தெரியாமல் போனதால் தான் இந்தக் கொடுமைகள் நடந்தன . நடந்துகொண்டும் இருக்கின்றன .
இருட்டு ஒரு பக்கம் தெரிந்தாலும் இன்னொரு பக்கம் வெளிச்சமும் தெரிகிறது . இன்றும்கூட அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் முயற்சியால் சில அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளைத் தோற்கடிக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்பதைப் பார்க்கிறோம் . ஊர் மக்கள் , சமூக ஆர்வலர்கள் சிலரின் முயற்சியால் சில அரசுப்பள்ளிகள் முன்மாதிரிப்பள்ளிகளாக மாற்றம் அடைந்துள்ளன . சமூக மாற்றம் குறித்த அக்கறைகொண்ட சிலர் அரசுப்பள்ளிகளில் படிக்க வைப்பதை பெருமையாகக் கருதுகிறார்கள் . எங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் படிக்க வைக்கிறோம் , அதுவும் தாய்மொழியாம் தமிழ் மொழியில் படிக்க வைக்கிறோம் என்று பெருமையோடு வெளியில் பேசுகிறார்கள் .
தனியார் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பும்  பெற்றோர்களில் கணிசமான எண்ணிக்கையினர் அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கடமையுணர்வின் மீது நம்பிக்கை அற்றவர்களாக உள்ளனர் . அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பெரும்பான்மையினர் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிக்கு அனுப்புவது இப்படியான அவநம்பிக்கை ஏற்பட வழிவகுக்கிறது . இதைச் சரிசெய்யவேண்டிய பொறுப்பு அரசை மட்டும் சார்ந்ததல்ல . பெற்றோர்களையும் சமூகத்தையும் சார்ந்தது . பெற்றோர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் நண்பர்களாகவும் , ஆலோசகர்களாகவும் அதேசமயம் கண்காணிப்பாளர்களாகவும் இருக்கவேண்டும் . பெற்றோர் ஆசிரியர் உறவு பேணப்படுவது அவசியமானது . கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் ஏட்டுச் செயல்பாட்டில் மட்டும் உள்ளன . பெற்றோர்கள் மட்டுமே பெரும்பான்மையினர் இக்குழுவில் இடம்பெற முடியும் . இக்குழுக்களை ஒவ்வொரு பள்ளியிலும் உயிர்ப்புடன் செயல்பட வைக்கவேண்டும் .
அரசுப் பள்ளி :
ஆங்கிலவழிக் கல்வி மோகத்தால் பெரும்பான்மையினர் தனியார் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் . ஆங்கில மொழி கற்றல் குறித்த , கல்விப் பயிற்று மொழி குறித்த தவறான எண்ணங்களே இதற்குக் காரணம் . இந்தத் தவறான எண்ணங்கள் தனியார் பள்ளிகளால் விதைக்கப்பட்டவை . இன்று தனியார் பள்ளிகளிலும் , அரசுப்பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள்  90% அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்கள் . ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக மட்டுமே படித்தவர்கள் . ஆங்கில வழியில் கற்பிக்கும் அளவிற்கு ஆங்கில மொழிப் புலமை அற்றவர்கள் . ஆங்கிலக் குருட்டு மனப்பாடக் கல்விக்கு உதவி செய்பவர்களாக மட்டுமே இவர்கள் இருக்க முடியும் . இதனைப் புரிந்துகொண்டுள்ள கல்வி விழிப்புணர்வுள்ள பெற்றோர்கள் சிலர் தனியார் பள்ளியில் சேர்த்தாலும் தமிழ் வழியில் தான் சேர்க்கிறார்கள் .
அரசுப்பள்ளிகளைத் தக்கவைப்பது அரசின் இலவசத் திட்டங்களால் சாத்தியப்படும் ஒன்றல்ல . கல்வியைக் குறுகிய கால நுகர்வுப்பண்டமாக மக்கள் கருதவில்லை . தங்கள் வாரிசுகளின் ஒளிமயமான எதிர்காலமாகக் கருதுகிறார்கள் . ஓட்டை , உடைசல் இல்லாத கல்வியும் பள்ளியும் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் . நல்ல கல்வி வாய்ப்புகளைக் குழந்தைகளுக்கு உருவாக்கிக் கொடுக்க பொருளாதார சுமைகளையும் தாங்குகிறார்கள் . அரசுப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை , சுகாதாரமான கழிப்பறையின்மை , நல்ல குடிநீர் வசதியின்மை ஆகிய தீர்க்கப்படாத  குறைபாடுகள் வசதி படைத்த பெற்றோர்கள் தனியார் பள்ளிக்குச்  செல்ல வழி வகுக்கிறது . தனியார் பள்ளிக்கு அனுப்ப வசதிவாய்ப்பு இல்லாத பெற்றோர்கள் அரசுப்பள்ளிக்கு அனுப்புகிறார்கள் . வசதியில்லாதவர் அதிகம் வசிக்கும் ஊர்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் மட்டும் குழந்தைகள் இருக்கிறார்கள் . ஏழைகள் இல்லை என்றால் அரசுப்பள்ளிகள் இருக்காது என்பது தான் எதார்த்த உண்மை . இது மிகப்பெரிய கொடுமை அல்லவா ? அரசு கல்விக் கடமைகளில் இருந்து பின்வாங்கியது தான் இந்தக் கொடுமைக்குக் காரணம் . நாங்கள் வரி செலுத்துகிறோம் , கல்வி வரி உள்ளிட்ட வரிகளை வசூலிக்கும் அரசு , நாட்டில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் தரமான , சமவாய்ப்பிலான , அவரவர் தாய்மொழி வழியிலான கல்வியைக் கொடுக்க மறுப்பது என்ன நியாயம் ? என்று மக்கள் கேள்வி கேட்கும் நிலை வரவேண்டும் . வசதி படைத்தவர்கள் , நடுத்தர வர்க்கத்தினர் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதே தீர்வு என்று நினைத்து பொருளாதார சுமைகளுக்கு ஆளாவது ஒரு அறியாமையே . எலிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவது இது தான் . அரசை கல்விக் கடமைகளை சரியாகச்  செய்ய வைக்க முயற்சி எடுக்கவேண்டும் ." என்கிறார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post