Title of the document



உயர்கல்விக்கு +2 மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பால், மீண்டும் 11ம் வகுப்பு பாடத்திட்டம் கிடப்பில் போடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, 10ம் வகுப்புக்கும், 12ம் வகுப்புக்கும் முக்கியத்துவம் அளிப்பதால், 11ம் வகுப்புப் பாடத் திட்டத்தை நடத்தாமலேயே காலம் கடத்தி வந்த தனியார் பள்ளிகளுக்கு, 11ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு என்ற அறிவிப்பும், உயர்கல்விக்கு 11 மற்றும் 12ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்ற அறிவிப்பும் பேரிடியாக இருந்தது. கடந்த ஆண்டு 11ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. இதனால்  11ம் வகுப்புப் பாடத்திட்டத்துக்கு ஒரு மறுபிறப்பு கிடைத்தது.
ஆனால், கடந்த சனிக்கிழமை, தமிழக கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்பில், கல்லூரி உள்பட உயர் கல்வி படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண்களே போதுமானது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச்சில் பிளஸ் 1 வகுப்புக்கு முதன்முறையாக பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது புதிய தேர்வுமுறைகள் பற்றிய போதிய தெளிவின்மை, குழப்பம் ஆகியன காரணமாக மாணவர்கள் சரியான முறையில் தேர்வுக்கு தயாராக முடியவில்லை. இதனால், பிளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்றனர்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 என தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளும் அரசு பொதுத் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். இதுபோன்ற காரணங்களால் அரசு புதிய உத்தரவினைப் பிறப்பித்திருப்பதாகக் கூறப்பட்டது.
இந்த புதிய அறிவிப்பினால், பிளஸ் 1 மதிப்பெண்களும் சேர்த்து ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்ற உத்தரவு தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் பல தனியார் பள்ளிகள் மீண்டும் 11ம் வகுப்புப் பாடத்திட்டத்தை நடத்தாமல், 12ம் வகுப்புப் பாடத்தையே நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் கழகம் தெரிவித்துள்ளது.
அதாவது, அரசுப் பள்ளிகள் 11ம் வகுப்புப் பாடத்தை வழக்கம் போலவே நடத்தும். ஆனால், தனியார் பள்ளிகள் 11ம் வகுப்புப் பாடத்தை முற்றிலும் புறக்கணித்து விடுவார்கள். 12ம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கவே கவனம் செலுத்துவார்கள் என்று கூறுகிறார்கள்.
தமிழக அரசின் இந்த புதிய அறிவிப்பை வரவேற்றிருக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், இனி 12ம் வகுப்பு மாணவர்கள் 1,200க்கு தேர்வெழுத வேண்டாம் என்றும், 600 ஆகக் குறைக்கப்பட்டிருப்பது மாணவர்களின் சுமையைக் குறைப்பதாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post