Title of the document


கேரள வெள்ள நிவாரணத்துக்கு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து கொள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய (என்.ஜி.ஓ.) சங்கம் முடிவு செய்துள்ளது. கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து வருவதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அணைகள் நிரம்பியதால் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து வெள்ளப்பாதிப்பு அதிகரித்துள்ளது. உயிர் இழப்பும் அதிகரித்து வருகிறது.





வீடு,உடமைகளை இழந்து உணவு, உடையின்றி மக்கள் தவிக்கிறார்கள். கேரளாவை புரட்டிப் போட்ட மழையால் சாலை, ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.கேரள அரசுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிவாரண உதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் சார்பாகவும் நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளனர்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து கொள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய (என்.ஜி.ஓ.) சங்கம் முடிவு செய்துள்ளது.


இது குறித்து சங்கத்தின் மாநில தலைவர் இரா.சண்முகராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கேரள மாநிலத்தில் பெய்து வரும் வரலாறு காணாத மழையின் காரணமாக துயருற்ற கேரள மக்களுக்கு உதவி செய்யும் வகையிலும் அவர்களது துயரத்தில் தமிழக அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும் பங்கு கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொது மக்களில் ஒரு பகுதி என்ற நிலையிலும் நிவாரண நிதி வழங்க முடிவு செய்துள்ளோம்.

எங்களது ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்து நிவாரண நிதி வழங்க உரிய ஆணை வழங்குமாறு தமிழக முதல்-அமைச்சரை அரசு அலுவலர் ஒன்றியம் கேட்டுக் கொள்கிறது.இதற்கு முன்உதாரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் இதுபோன்று தங்கள் பங்களிப்பை வழங்கி உள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post