கேரள வெள்ள நிவாரணத்துக்கு உண்டியல் பணத்தை வழங்கிய சிறுமி!உண்டியல் பணத்தை கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கிய சிறுமி அனுப்பிரியா.

சைக்கிள் வாங்குவதற்காக நான்காண்டுகளாக சேமித்து வந்த உண்டியல் பணம் முழுவதையும், கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கினார் விழுப்புரத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி.
கேரள மாநிலத்தில் தொடர் கன மழையால், வெள்ளப் பெருக்கும், நிலச் சரிவும் ஏற்பட்டு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில், 324 பேர் வரை உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வீடு, உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசும், தமிழகம் உள்ளிட்ட பிற மாநில அரசுகளும் நிவாரண உதவிகளை அளித்து வருகின்றன.
கேரள வெள்ளப் பாதிப்புக்கு பொது நல அமைப்பினரும், பொது மக்களும் நிவாரணம் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், விழுப்புரம் கே.கே.ரோடு சிவராம் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த கே.சிவசண்முகநாதன்-லலிதா தம்பதியரின் மகள் அனுப்பிரியா(8), தான் 4 ஆண்டுகளாக உண்டியல்களில் சேமித்து வைத்திருந்த ரூ.9 ஆயிரத்தை கேரள மாநில வெள்ள நிவாரணத்துக்கு வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு சைக்கிள் வாங்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அதற்காக 5 உண்டியல்கள் வாங்கி 4 ஆண்டுகளாக பணத்தை சிறுகச் சிறுக சேமித்து வந்தேன். தற்போது உண்டியல்கள் அனைத்தும் நிரம்பின. விரைவில் சைக்கிள் வாங்குவதாக இருந்தேன்.
இந்த நிலையில், கேரளத்தில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட செய்திகள் வந்ததைப் பார்த்தேன்.
அதனால், எனது சேமிப்புப் பணத்தை, கேரள மாநில மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண நிதியாக வழங்க எனது தந்தையிடம் தெரிவித்தேன். அவரும் உடனே செய்வதாக தெரிவித்தார் என்றார்.
அவரது பெற்றோர் கூறுகையில், எங்கள் மகள் அனுப்பிரியா எடுத்த முடிவை ஏற்று, அவரது உண்டியல் பணத்தை, கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வங்கி வரைவோலை எடுத்து அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றனர்