மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு


கோவை மாவட்டத்தில் பொது தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க செய்வதற்காக மாநகராட்சி பள்ளிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
பிளஸ்2, பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்து கோவை மாவட்டம் மாநில அளவில் 8 மற்றும் 15வது இடத்திற்கு பின்தங்கியது.
பிளஸ்2 பொது தேர்வினை மாவட்டத்தில் 36,459 ேபர் தேர்வு எழுதினர். இதில், 34,805 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 95.98 பெற்றது.
பத்தாம் வகுப்பு பொது தேர்வை 40,307 மாணவர்கள் தேர்வு எழுதினர். 38,638 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 95.86 பெற்றது.
இதில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளை விட மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் ெபாது தேர்வில் குறைந்தது.
பிளஸ்2 பொது தேர்வை 16 மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த 2,088 பேர் தேர்வு எழுதினர். இதில், 1823 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி சதவீதம் 87.31. பத்தாம் வகுப்பு பொதுதேர்வை 27 மாநகராட்சி பள்ளிகளில் 1,890 பேர் தேர்வு எழுதினர். 1,694 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி சதவீதம் 89.63. இதனை தொடர்ந்து மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, பீளமேடு மாநகராட்சி பள்ளி, ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளி, ஆர்.எஸ்.புரம் உள்பட 5 மாநகராட்சி பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி, கற்பிக்கும் முறைகள் தொடர்பாக ஆய்வு செய்தார்.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறுகையில், 'மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க ஆய்வு நடத்தப்படுகிறது. அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்யப்படும்.
வரும் கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதத்தில் கோவை மாவட்டத்தை முதல் 5 இடங்களுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.