Title of the document


கேரளத்தில் பிளஸ் 2 பயின்று, தமிழக ஒதுக்கீட்டின்கீழ் எம்பிபிஎஸ் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி கோரிய வழக்கில், 3 மாணவர்களுக்கு மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
 இதுதொடர்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஜி.அதுல்சந்த் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
 எனது குடும்பம் கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டது. நான் ஏழாம் வகுப்பு வரை கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் படித்தேன். பின்னர் 8 -ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தேன். நீட் தேர்வில் 339 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 789 ஆவது இடத்தை பிடித்துள்ளேன்.
 இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்தேன். ஆனால், மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை. தேர்வுக்குழுவுக்கு தமிழக அரசு வழங்கிய இருப்பிடச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் அனுப்பியும் எனது பெயர் பரிசீலிக்கப்பட வில்லை. இந்நிலையில் கலந்தாய்வுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீட் தேர்வில் நான் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தமிழகத்தில் நடைபெறும் மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொள்ள என்னை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 இதேபோல, கேரளத்தில் பிளஸ் 2 படித்து தமிழகத்தில் நீட் தேர்வெழுதிய தங்களுக்கும் தமிழக ஒதுக்கீட்டின்கீழ் நீட் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என மேலும் இரு மாணவர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
 இந்த மனுக்கள், நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி, அதுல் சந்த் உள்ளிட்ட மூன்று மாணவர்கள் தமிழக ஒதுக்கீட்டின்கீழ் நீட் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும் இந்த உத்தரவு வழக்கின் இறுதித் தீர்ப்புக்குள்பட்டது எனவும் உத்தரவிட்டுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post