ஜூலை மாதம் முதல் மாணவர்களுக்கு NEET தேர்வுக்கான அரசு பயிற்சி

ஜூலை மாதம் முதல் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துரை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: தமிழகத்தில் பொறியியல் படித்துவிட்டு 1.70 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். பிளஸ்2 முடித்த மாணவர்களுக்கு சிஏ படிப்புக்கு பயிற்சி அளிக்கப்படும். 12ம் வகுப்பு முடித்தாலே வேலை பெறும் வகையில், அரசு பயிற்சி வழங்கி வருகிறது எனப்பேசினார்.
தொடர்ந்து, அவர் அளித்த பேட்டி: ஜூலை மாதம் முதல் நீட் தேர்வு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 ஆயிரம் மாணவர்கள் பயிற்சிபெறக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்காக நடமாடும் நூலக வசதி செய்து தர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவிலேயே தமிழக பள்ளி கல்வித்துறை மூலம் தான் சிஏ பயிற்சிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. படித்து விட்டு வேலையில்லை என்றநிலை ஏற்படக்கூடாது என உறுதியாக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.