Title of the document

மாணவர்கள் இல்லாததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் பள்ளியாக அல்லம்பட்டி அரசு தொடக்கப் பள்ளி மூடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோங்குடி ஊராட்சி அல்லம்பட்டியில் 1998-ல் சுமார் 50 மாணவர்களோடு அரசு தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. இரு வகுப்பறைகளைக் கொண்ட பள்ளிக் கட்டிடம், சமையல்கூடம், கழிப்பறைகள், குடிநீர் தொட்டி,விசாலமான மைதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் செயல்பட்ட இப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் என இருவர் பணிபுரிந்தனர். 

இப்பள்ளியில் அல்லம்பட்டி, மனவயல், தாழிச்சேரி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்றனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தலைமை ஆசிரியர் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்ததாகவும், அவர் ஒழுங்கீனமாக செயல்பட்டதாகவும் ஊர் மக்களால் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக கல்வித் துறை அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் உரிய 

நடவடிக்கை இல்லையாம்.இதனால் விரக்தி அடைந்த மக்கள், மாணவர்களை இப்பள்ளிக்கு அனுப்பாமல் அங்கிருந்து 3 கி.மீ.தொலைவில் உள்ள பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் அறந்தாங்கி தனியார் பள்ளிகளில் சேர்த்தனர். பின்னர், சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கநிலைக்கு சுருங்கியதால், ஓராசிரியர் பள்ளியானது.

அப்போது, இங்கு பணியாற்றிய ஒரு ஆசிரியரும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பணியாற்றியதாகக் கூறி, கடந்த ஆண்டு பயின்ற 2 மாணவர்களும் வேறு பள்ளிக்கு சென்றுவிட்டனர். 

இதனால், இந்தக் கல்வி ஆண்டுஇப்பள்ளி திறக்கப்படவில்லை. இங்கு பணியாற்றிய ஆசிரியரும் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளி மூடப்பட்டுள்ளதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் இளைப்பாறும் இடமாகவும், திறந்த வெளி மதுபானக் கூடமாகவும் பள்ளி வளாகம் தற்போது மாறியுள்ளது.

இதுகுறித்து அல்லம்பட்டியைச் சேர்ந்த அழகர், கூறியது: அல்லம்பட்டி, தாழிச்சேரி, மனவயல் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 100 குடும்பத்தினர் உள்ளனர். இப்பகுதியில் இருந்து சுமார் 60 மாணவர்கள் 3 கி.மீ. தொலைவில் உள்ள பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கும் அறந்தாங்கியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கும் செல்கின்றனர்.

அல்லம்பட்டி அரசு தொடக்கப் பள்ளிக்கு கடந்தசில ஆண்டுகளாக வந்த ஆசிரியர்கள் முறையாக பணியாற்றாததால் இப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் மறுத்துவிட்டனர். ஆசிரியர்களின் ஒத்துழைப்பின்மையால் இப்பள்ளியை மூடவேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. கிராம வளர்ச்சிக்காக கொண்டுவரப்பட்ட பள்ளி மூடப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது என்றார்.

முயற்சி பலனளிக்கவில்லைஅறந்தாங்கி கல்வித் துறை அலுவலர்கள்  கூறியபோது, “அல்லம்பட்டி கிராமத்தில் இருந்து பெரும்பாலான மாணவர்களை தனியார் பள்ளிக்கும், தாழிச்சேரியில் இருந்து பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கும் அனுப்புகின்றனர். 

உள்ளூர் மாணவர்களை சேர்த்தால் நாங்களும் சேர்க்கிறோம் என தாழிச்சேரி மக்கள் தெரிவித்தனர். ஆனால், அல்லம்பட்டி மக்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. ஊர் மக்கள் இப்பள்ளியில் சேர்க்க முன்வராததால் நாங்கள் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை”என்றனர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post