Title of the document

வேலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மாணவர்களுடன் மாணவராக அமர்ந்து பாடம் கவனித்தார்.

பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் வேலூர் மாவட்டம் பின்தங்கியே காணப்படுகிறது. இதனால், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் குறைந்துள்ளது. ஆண்கள் பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதமும் மிகவும் குறைவாக இருக்கிறது. அதனால், வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவிகிதம் குறைவாக இருக்கும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும், மாணவர்களின் கற்றலில் கூடுதல் கவனம் செலுத்த ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் என 2 கல்வி மாவட்டங்கள் இருந்தன. தற்போது அரக்கோணம், ராணிப்பேட்டை, வாணியம்பாடி என கூடுதலாக 3 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அருகிலுள்ள தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களைக் கொண்டு பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ராமன் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

வேலூர் கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் ராமன் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் ஆகியோர் நேற்று (ஜூன் 7) ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பனிரெண்டாம் வகுப்பறையில் மாணவர்களுடன் மாணவராக உட்கார்ந்து 45 நிமிடம் வரை வேதியியல் பாடத்தை கவனித்தார்.

பின்பு, மற்ற வகுப்புகளுக்குச் சென்று மாணவர்களைப் படிக்கச் சொல்லியும், கற்றுக்கொண்டதை எழுதச் சொல்லியும் மாணவர்களின் கல்வித் திறனை ஆய்வு செய்தார். இதையடுத்து, வாசிப்புத் திறன் குறைவாக உள்ள மாணவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டைப் பார்த்து, விடுமுறை எடுத்த ஆசிரியர் மற்றும் வருகைப் பதிவேட்டை பத்து மணிக்குள் முடிக்காதது குறித்து, விடுப்பு எடுத்த ஆசிரியருக்கும், தலைமை ஆசிரியருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். கால தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post