Title of the document


 தமிழகத்தில் அரசு பள்ளி சத்துணவு மையங்களில்,பாக்கெட் மசாலா பொருட்களை
பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரைண்டர், மிக்சி வழங்கப்பட்டுள்ளதால் வீட்டு முறை சமையலுக்கு மாற உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக சத்துணவு திட்டத்தில், அரசு பள்ளிகளில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. சாம்பார் சாதம், கீரை சாதம், எழுமிச்சை சாதம், வெஜிடபிள் பிரியாணி உள்ளிட்ட, 11 வகையான கலவை சாதம், ஐந்து வகையான மசாலா முட்டை, வறுத்த உருளைக்கிழங்கு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.தமிழகத்தில், 270 தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட பள்ளிகள் உட்பட, 43 ஆயிரத்து, 205 பள்ளிகளில், சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் சுகாதாரமான முறையில் சமைத்திட, சமையல் எரிவாயு, பாத்திரங்கள், தட்டு, டம்ளர், குக்கர், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப் பட்டுள்ளன.ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, படிக்கும் குழந்தைகளுக்கு, தினமும், 100 கிராம்; ஆறுமுதல், 10ம் வகுப்பு வரை, படிக்கும் குழந்தைகளுக்கு, 150 கிராம் அரிசி மற்றும் பருப்பு, காய்கறி, முட்டை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

சத்துணவு திட்டத்தில் பல மாவட்டங்களில், பாக்கெட் மசாலாக்களை பயன்படுத்தி, சமையல் செய்து வருகின்றனர். அதிகாரிகளின் ஆய்வில், அதன் தரம் மற்றும் காலாவதி தேதி கவனிப்பதில் குறைபாடுகள் இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து, அனைத்து சத்துணவு மையங்களிலும், பாக்கெட் மசாலா வகைகளை பயன்படுத்தக்கூடாது. சமையலுக்கு தேவையான அனைத்து வகை மசாலாக்களையும், சமையலர் சுயமாக தயாரித்து, சமையல் செய்ய, தமிழக அரசு, அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் வழியாக, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சத்துணவு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:அனைத்து பள்ளி சத்துணவு மையங்களுக்கும், மிக்சி, கிரைண்டர் வழங்கப் பட்டுள்ள நிலையில், பாக்கெட் மசாலா பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. இதனால், மதிய உணவின் தரம், மாணவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே வீட்டு முறைப்படி, மதிய உணவுக்கு மசாலா பொருட்களை தயாரிக்க வேண்டும்.சத்துணவு மையங்களில், மசாலா பாக்கெட்டுகள்பயன்படுத்தப்பட்டு வந்தால்,, அதை உடனடியாக நிறுத்தி, உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டுமுறைப்படி சமையல் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post