ஆன்லைன்' கவுன்சிலிங் பி.ஆர்க்.,கிற்கு, இல்லை
தமிழகத்தில், 50க்கும் மேற்பட்ட, பி.ஆர்க்., கல்லுாரிகளில், 3,500 இடங்கள் உள்ளன. இவற்றில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அண்ணா பல்கலை வாயிலாக, ஒற்றை சாளர முறையில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

 இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க, இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் நடத்தும், 'நாட்டா' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


 இந்த ஆண்டுக்கான, நாட்டா தேர்வு, ஏப்ரல், 29ல், நாடு முழுவதும் நடந்தது. இதற்கு, 49 ஆயிரத்து, 390 பேர் பதிவுசெய்திருந்தனர். தேர்வு முடிவுகள், ஜூன், 6ல், வெளியாகின. இதில், 69 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 இது, 2017ஐ விட, 19 சதவீதம் குறைவாகும். மாநில அளவிலான தேர்ச்சியில், 84 சதவீதத்துடன், கோவா முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில், 5,623 பேர், நாட்டா தேர்வில் பங்கேற்று, 3,364 பேர், அதாவது, 60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 தமிழகத்தில், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள கல்லுாரிகளில், 2,267 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.இந்த இடங்களில், நாட்டா தேர்ச்சி பெற்ற, 3,364 பேருக்கு, தரவரிசை அடிப்படையில், இடங்கள் ஒதுக்கப்படும்.

இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங், ஜூலையில் நடத்தப்பட உள்ளது.இன்ஜினியரிங் படிப்புக்கு, 'ஆன்லைன்' கவுன்சிலிங் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், பி.ஆர்க்., கவுன்சிலிங்கை, வழக்கம் போல, ஒற்றை சாளர முறையிலேயே நடத்த, உயர்கல்வித் துறை முடிவு செய்து உள்ளது.

இதனால், மாணவர்கள் சென்னைக்கு வந்து, நேரில் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்.கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான விண்ணப்ப பதிவு மட்டும், ஆன்லைனில் நடத்தப்படும்.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை, சில தினங்களில் அண்ணா பல்கலை வெளியிடும் என, உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.