இரண்டே ஆண்டுகளில் இந்தியத் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் முன்னணி வகிப்பார்கள்! - உதயச்சந்திரன் பேட்டி -விரிவான செய்தி -நீண்ட பதிவு

இரண்டே ஆண்டுகளில் இந்தியத் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் முன்னணி வகிப்பார்கள்! - உதயச்சந்திரன்  பேட்டி
-விரிவான செய்தி
-நீண்ட பதிவு

அறிவுஜீவிகள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலரையும் கூட்டி விவாதித்திருக்கிறீர்கள். பாடத்திட்டத்தின் நோக்கம் பாடநூல்களில நிறைவேறியிருக்கிறதா?

பொதுவாகப் பாடத்திட்ட உருவாக்கம் என்பது ஆசிரியர்களும் ஆசிரியர் பயிற்றுநர்களும் சேர்ந்து உருவாக்கி மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதாக இருந்தது. அதை மாற்றி, பாடத்திட்டம் உருவாக்குதல், பாடநூல் எழுதுதல் என்பதை அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக மாற்றியிருப்பதுதான் முக்கியமான தொடக்கம் என்று நினைக்கிறேன்.

ஒரு வகுப்பறையில் என்ன பயிற்றுவிக்க வேண்டும் என்பதை சமூகத்தில் உள்ள அறிவுஜீவிகள்தான் முடிவுசெய்ய வேண்டும்.

எப்படிப் பயிற்றுவிக்க வேண்டும் என்பதை ஆசிரியர்கள் முடிவுசெய்ய வேண்டும். அந்தப் புரிதலோடுதான் பாடத்திட்ட வரைவைத் தொடங்கினோம்.

சமய சார்பற்ற முறை, பாலின சமத்துவம், நவீனத்துவ அறிமுகம், பழைமையைக் கைவிடாமல் அதை எப்படி மாணவர்களிடம் கொண்டுசேர்ப்பது, மறந்துபோன பழந்தமிழ் இலக்கியங்களின் வடிவங்களை நினைவூட்டுதல், சுற்றுச்சூழல், இயற்கை தொடர்பான அறிவியல்பூர்வமான அணுகுமுறை, விளிம்புநிலை மக்கள் மீதான கரிசனம் இதுபோன்ற பல சிந்தனைகளை இயன்றவரையில் தொட்டுக்காட்டியிருக்கிறோம்.

பாடத்திட்ட வரைவுக்குப் பாடநூல் வடிவம் கொடுப்பதில் நீங்கள் எதிர்கொண்ட சவாலாக எதை நினைக்கிறீர்கள்?

முதல் சவால், மிகக் குறுகிய கால அவகாசம்.

என்சிஇஆர்டி மற்றும் மற்ற மாநிலங்களின் பாடநூல் உருவாக்கத்துக்குக் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது எடுத்துக்கொள்ளப்படும். நாங்கள் ஒன்பது மாதத்தில் இந்தக் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறோம். 174 புத்தகங்கள், 35,000-க்கும் மேற்பட்ட பக்கங்கள்.

இரண்டாவதாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிவுஜீவிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்விச் செயல்பாட்டாளர்கள் அனைவரையும் கொண்டுவந்து, அவர்களுடைய கருத்துகளைக் கேட்ட பிறகு அந்தக் கருத்துகளைப் பாடநூல்களில் எப்படி பிரதிபலிக்கச் செய்வது என்பது மிகப்பெரும் சவாலாக இருந்தது.

முக்கியமாக, நாங்கள் இலக்காகத் தீர்மானித்துக்கொண்ட உயரம் மிக உயரமானது. செயல்பாட்டுப் பயிற்சி, ‘உங்களுக்குத் தெரியுமா?’, கலைச்சொல்லாக்கம், இணையப் பயன்பாடு என பாடப் பகுப்பு முறையே சவாலாக இருந்தது. இணைய வழிக் கற்றல் செயல்பாடுகளுக்காக மட்டுமே 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உழைத்திருக்கிறார்கள். இந்தியாவிலேயே வேறு எந்தப் பாடநூலிலும் இந்த முறை பின்பற்றப்பட்டதில்லை. தமிழகம்தான் முன்னோடி.

பதிப்பிலும் மேம்படுத்தியிருக்கிறோம். நவீன ஓவியர்களின் வழிகாட்டுதலோடு, ஓவியக் கல்லூரி மாணவர்களைக் கொண்டு ஒவ்வொரு பாடத்துக்கும் விளக்கப்படங்களை வரையச் செய்து பயன்படுத்தியுள்ளோம். நமக்கு இருக்கிற சாத்தியங்களுக்குள் அதைச் செய்து முடித்திருக்கிறோம் என்பது முக்கியமானது.

இதுவரையில் தமிழக மாணவர்களிடம் நமது பாடநூல்களைப் பற்றிய தாழ்வுணர்ச்சி இருந்திருக்கலாம். அது அகற்றப்பட்டிருக்கிறது என்பதே முக்கியமான சாதனை.

புதிய பாடநூல்களுக்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்த வேண்டியிருக்கும். அதற்கு முன்பாக ஆசிரியர்களையும் அதற்குத் தயார்படுத்த வேண்டும் அல்லவா?

ஆசிரியர் இந்த மாற்றத்தை எதிர்கொள்வதற்குத் தயாராக இருக்கிறார்கள். ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

பாடநூல்களை எழுதிய துறைசார் வல்லுநர்கள் தமிழ்நாடு முழுக்க பயணித்து ஆசிரியர்களைச் சந்திப்பதற்குத் திட்டமிட்டிருக்கிறோம். கூடவே, தொழில்நுட்பத்தையும் நிறையவே பயன்படுத்துகிறோம்.

திறமையான ஆசிரியர்களைக் கொண்டு அவர்களை வகுப்பெடுக்க வைத்து, நிறைய காணொலி பாடங்களை இணையத்தில் வெளியிட உள்ளோம்.

பாடத்திட்டம், பாடநூல் ஆகியவற்றில் மாற்றங்கள் வந்தாலும் கடைசியில் மாணவர்களின் இலக்கு என்பது தேர்வில் வெற்றிபெறுவதாகத்தான் இருக்கிறது.

மாணவர்களை மதிப்பிடும் முறையிலும் மாற்றங்கள் உண்டா?

தமிழ்நாட்டில் கேள்வி கேட்கும் முறை என்பதே மனப்பாடம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் கோட்பாடுகளைப் படிப்பதாகவுமே இருந்துவருகிறது. பொறியியல் பாடத்திலும்கூட கோட்பாடுகள்தான் அதிகம் இருக்கிறது.

அகில இந்திய அளவிலான தேர்வுகளைப் பார்க்கிறபோது, தீர்வு காணும் முறையில்தான் அதிக அளவிலான கேள்விகளைப் பார்க்க முடிகிறது.

அதற்கு ஏற்றபடி, கேள்வி கேட்கும் முறையில் மிகப்பெரிய மாற்றங்களை புதிய பாடத்திட்டம் கொண்டுவருகிறது.

மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் எல்லாமே நமது மாணவர்களிடம் பாடங்களைப் புரிந்துகொள்ளும் திறன் குறைவாக இருக்கின்றன என்றும் தீர்வு காணும் அணுகுமுறையில் பின்னடைவு இருக்கிறது என்றும் தெரிவிக்கின்றன.

மேனிலைக் கல்விப் பாடங்களையே உதாரணமாக எடுத்துக்கொண்டால், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களைச் சிறப்பாகப் படிக்கிறார்கள். கொஞ்சம் நன்றாகப் படிக்கிற மாணவர்கள் வேதியியல் பாடத்தில் சிறந்து விளங்குகிறார்கள். ஆனால், இயற்பியலில் மந்தமாக இருக்கிறார்கள். காரணம் என்னவென்றால் இயற்பியலில் கோட்பாட்டுப் புரிதல் இல்லை. மேலும் கேள்விகள் எல்லாமே தீர்வுகாணும் முறையில் உள்ளன. இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளோம்.

இதை எதிர்கொள்ள புதிய பாடத்திட்டம் எந்த வகையில் உதவும்?

கோட்பாட்டுகளைப் புரிந்துகொள்ளவும் அவை நடைமுறை வாழ்க்கையில் எப்படிப் பயன்படுகின்றன என்பதையும் புரிந்துகொள்ளவும் முயற்சிகள் எடுத்திருக்கிறோம். அதேபோல, தீர்வுகாணும் வினாக்களுக்கு எப்படி விடையளிப்பது என்பதை உதாரணங்களோடு விளக்கியிருக்கிறோம். போட்டித் தேர்வுகளில் கேட்கப்பட வாய்ப்புள்ள வினாக்களை விடையோடு அளித்திருக்கிறோம்

கேள்வி கேட்கும் முறையில் மட்டும் மாற்றமில்லாமல் அதைக் கற்றுக்கொள்ளும் முறையிலும் கவனம்செலுத்தியிருக்கிறோம்.

அதேநேரத்தில் படிப்பதைவிட, கற்பிப்பதைவிட கஷ்டமான விஷயம் கேள்விகள் கேட்பதுதான். எனவே, அதற்காகவே ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கவும் திட்டமிட்டிருக்கிறோம்.

தமிழ் மொழிப் பாடத்தைப் பொறுத்தவரை, மொழியாளுமைத் திறனை வளப்படுத்துவதற்காக நிறைய பயிற்சிகளைக் கொடுத்துள்ளோம். ஆங்கிலத்தைப் பொறுத்தவரை பேச்சுப் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்.

அறிவியல் பாடங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு கோட்பாடும் நடைமுறை வாழ்க்கையில் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் குறிப்பிட்டிருக்கிறோம்.

நம்முடைய மாணவர்களுக்கு ஒப்பீட்டு ஆய்வு அணுகுமுறை குறைவாக இருக்கிறதோ என்ற எண்ணமும் இருந்தது. எனவே, அதையும் பாடங்களின் ஒரு பகுதியாகச் சேர்த்திருக்கிறோம்.

உதாரணமாக, எழுத்தறிவு குறைவாக உள்ள மாவட்டங்களின் பட்டியலையும் பாலின விகிதம் குறைவாக உள்ள மாவட்டங்களின் பட்டியலையும் அடுத்தடுத்து கொடுத்து இரண்டுக்கும் உள்ள தொடர்புகளை மாணவர்களே அறிந்துகொள்ளச் செய்திருக்கிறோம்.

மாணவர்களிடம் ஆய்வு அடிப்படையிலான புரிதல்களை ஏற்படுத்த என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன?

மாவட்டங்கள், மாநிலங்கள், நாடுகள் என்று ஒப்பீட்டு ஆய்வுமுறையை விரிவுபடுத்திக்கொள்ளும் வகையில் பயிற்சிகளை அளித்துள்ளோம். வெவ்வேறு துறைகளை ஒன்றிணைத்து அணுகும் ஆய்வுமுறையையும் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

உதாரணத்துக்கு, சிந்து சமவெளி எழுத்துகள் பற்றிய அறிமுகத்தை கணினி அறிவியலில் ‘அல்காரிதம்’ பாடத்திலும் நீலகேசியில் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று சொல்லியிருப்பதைத் தாவரவியல் பாடத்திலும் சேர்த்துள்ளோம். பொருளாதாரம் தெரியாமல் வரலாறு படிப்பது முழுமையாகாது.

இதையெல்லாம் கணக்கில்கொண்டு ஒவ்வொரு துறையையும் தனித்தனிப் பாடங்களாகப் படிக்காமல் வெவ்வேறு துறைகளை ஒன்றிணைத்துப் படிக்கும் அணுகுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

11-ம் வகுப்பு பாடங்களில், மாணவர்கள் குறிப்பிட்ட பாடத்தில் மேற்கல்வி பயிலவும் வேலைவாய்ப்புகளைப் பெறவும் உள்ள வாய்ப்புகளை விரிவாகப் பட்டியலிட்டிருக்கிறோம்.

நம்மிடம் தொழில்முனையும் திறன் குறைவாக இருக்கிறது என்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அதையும் சரிசெய்ய முயன்றிருக்கிறோம்.

தமிழக மாணவர்கள் தேசிய அளவிலான தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த வகையில், தற்போது வெளிவந்திருக்கும் புதிய பாடநூல்கள் மாணவர்களுக்கு எப்படிப் பயனுள்ளதாக இருக்கும்?

போட்டித் தேர்வுகளுக்காக மட்டுமே நாம் பாட நூல்களை உருவாக்கினோம் என்றால் அது குறுக்குவழியில் செல்வதுபோல ஆகிவிடும். ஆனாலும், போட்டித் தேர்வுகள் எந்தத் திசையை நோக்கி பயணிக்கின்றன என்பதைக் கவனமாகப் பார்த்து இந்தப் பாடநூல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 11-ம் வகுப்புப் பாடத்திற்கான 99% கேள்விகள் நம்முடைய புதிய பாடத்திட்டத்தில் இருக்கிறது. இந்தப் புத்தகங்கள் நல்ல ஒரு கருவி.

இதைப் பயன்படுத்தி, ஆசிரியர்களும் சிறப்பாகச் சொல்லிக்கொடுக்கும்போது தமிழக மாணவர்கள் அகில இந்தியப் போட்டித் தேர்வுகளில் மிகச்சிறப்பான வெற்றிகளைப் பெற முடியும்.

என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், இந்தப் புதிய புத்தகங்கள் ஆசிரியர்கள் இன்னும் கொஞ்சம் கடுமையாக உழைத்துச் சொல்லித்தருகிறபட்சத்தில், மாணவர்களும் தேர்வுகளுக்காகச் சிறந்த முயற்சிகளை எடுக்கிறபட்சத்தில், இன்னும் இரண்டு ஆண்டுகளில் எந்தச் சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய வலிமையை நமது மாணவர்கள் பெறுவார்கள் என்பது என்னுடைய கணிப்பு.

இன்னும் ஐந்து வருடங்களில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் உள்ள அகில இந்திய அளவிலான இடங்கள் அனைத்தையும் தமிழக மாணவர்கள் கைப்பற்றுவார்கள்.

புதிய பாடத்திட்ட உருவாக்கத்தில் அரசியல் தலையீடுகள், குறுக்கீடுகள் இருந்தனவா?

உண்மையாகவே சொல்கிறேன், தலையீடுகள் இன்றி நானும் என்னுடைய குழுவினரும் இந்தப் புத்தகங்களை உருவாக்கினோம். இந்தப் புத்தகங்கள் இவ்வளவு சிறப்பாக வெளிவருவதற்கு தமிழக அரசும், கல்வித் துறை அமைச்சரும் கொடுத்த சுதந்திரமே காரணம்.

0 Comments:

Post a Comment