அந்தந்த மாவட்டங்களிலேயே இனி நீட் தேர்வு மையங்கள்: மத்திய அமைச்சர் ஜாவடேகர் உறுதி


நீட் தேர்வு மையங்கள் இனி அந்தந்த மாவட்டங்களிலேயே அமைக்கப்படும்; நீட் தேர்வை எழுத வேறு மாநிலங்களுக்குச் செல்லும் நிலை மாணவர்களுக்கு இனி ஏற்படாது என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.


சென்னை ஐஐடி-யில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அவர் அளித்த பேட்டி:

தமிழக மாணவர்கள் நீட் தேர்வை வேறு மாநிலங்களுக்குச் சென்று எழுதும் நிலை, அடுத்த ஆண்டு முதல் ஏற்படாது. கடந்த ஆண்டு 100 தேர்வு மையங்கள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தன. வரும் ஆண்டில் இது 150- ஆக உயர்த்தப்பட உள்ளது. அது மட்டுமின்றி, ஒரு மாவட்டத்திலிருந்து 4,000-த்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது, அந்தந்த மாவட்டங்களிலேயே நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இதன்மூலம், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் அந்த மாவட்டத்திலேயே தேர்வு மையம் ஒதுக்கப்படும்.

மொழி பெயர்ப்பாளர்களைப் பெற்று...: நீட் தேர்வு கேள்விகளில் எந்தவொரு குளறுபடியும் இல்லை. இருந்தபோதும், இதுபோன்ற சர்ச்சைகள் எதிர் காலத்தில் ஏற்படாத வகையில், தமிழக அரசிடம் நல்ல மொழி பெயர்ப்பாளர்களைக் கேட்டுப் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுவான பாடத் திட்டத்திலிருந்தே கேள்விகள் தயாரிக்கப்படுகின்றன.
விரைவில் புதிய கல்விக் கொள்கை: புதிய தேசிய கல்விக் கொள்கை விரைவில் கொண்டு வரப்படும். அதே நேரம், அனைத்து கல்வி வாரியங்களையும் ஒன்றாக இணைக்கும் திட்டம் எதுவும் இல்லை. மேலும், பிற மாநிலங்களில் உள்ளது போன்று தமிழகத்திலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கூடுதலாகத் தொடங்கப்படும்.

மாணவர்களுக்கு மாதம் ரூ. 1 லட்சம் வரை ஆராய்ச்சி உதவி நிதி: மாணவர்களிடையே ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் கல்வி நிறுவனங்களுக்கு இடையே ஹேக்கத்தான் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிக்காக 50,000 மாணவர்கள் தங்களின் திட்டங்களை அளித்துள்ளனர். இந்த ஊக்குவிப்பு மூலம், மாணவர்கள் பல்வேறு துறைகளுக்கான பிரச்னைகளுக்குத் தீர்வுகளை கண்டறிந்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலும், ஆய்வுகளுக்கான கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும், உதவித் தொகைகளையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இதுவரை, மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்ட 200 திட்டங்களுக்கு ரூ. 600 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இந்த ஆண்டு மேலும் 200 திட்டங்களைத் தேர்ந்தெடுத்து நிதி ஒதுக்க மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளது. திறமையான ஆராய்ச்சி மாணவர்கள் வெளிநாடு செல்வதைத் தடுக்க இந்தியாவிலேயே ஆய்வுக் கூட்டமைப்பு அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் வரை ஆராய்ச்சி உதவிநிதி வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆர்.டி.இ. புகாருக்கு முன்னுரிமை: கல்வி பெறும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.இ.) நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை மாணவர்களுக்கு சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். இதில் ஏதாவது புகார்கள் வரும்போது, அதிக முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
அமித்ஷா குறித்து தவறான பரப்புரை: பாஜக தலைவர் அமித்ஷா மீது எதிர்க்கட்சியினர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின்போது, அமித்ஷா இயக்குநராக உள்ள ஆமதாபாத் கூட்டுறவு வங்கியில் செல்லாத நோட்டுகள் அதிக அளவில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. அது பொய்யான, தவறான பரப்புரை.

பசுமை வழிச் சாலை பிரச்னைக்கு சுமுகத் தீர்வு: சேலம்-சென்னை பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்புக்கு சுமுகத் தீர்வு காணப்படும். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விரைவில் தமிழகம் வர உள்ளார். அப்போது இந்தப் பிரச்னையையும் தீர்த்து வைப்பார் என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.