
5ஜி சேவையை தொடங்கும் நோக்கத்துடன் ரேடிஸிஸ் கார்பரேஷன் தொலைதொடர்பு தொழில்நுட்ப சேவை நிறுவனத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாங்கியது.
இந்திய தொலைதொடர்புத் துறை நிறுவனங்களில் முதன்முறையாக 4ஜி சேவையை மலிவு விலையில் அறிமுகப்படுத்தி அதன்மூலம் மாபெரும் வாடிக்கையாளர்களை கவர்ந்தது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.
மேலும் இந்தியாவின் பிரதான வாடிக்கையாளர்களைக் கொண்ட தொலைதொடர்புத்துறை சேவை நிறுவனமாகவும் மிகவும் குறுகிய காலத்தில் உருவெடுத்தது. இந்நிலையில், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அடுத்து 5ஜி சேவையை விரைவில் இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை ஜியோ நிறுவனம் தற்போது மேற்கொண்டு வருகிறது.
அவ்வகையில், சர்வதேச தொலைதொடர்புத்துறை தொழில்நுட்ப சேவை நிறுவனமான ரேடிஸிஸ் கார்பரேஷன் நிறுவனத்தின் பங்குகளை 75 மில்லியன் டாலர்கள் (ரூ.510 கோடி) மதிப்பில் வாங்கியுள்ளது. இதில் அந்நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கின் மதிப்பையும் 1.72 டாலர்கள் என்ற மதிப்பில் ஜியோ நிறுவனம் பெற்றுள்ளது. இதனால் ரிலையன்ஸ் ஜியோ-வின் வளர்ச்சி மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையின் அடிப்படையில் 5ஜி சேவையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உலகளவில் புதிய தொழில்நுட்ப மைல்கல்லை எட்டியுள்ளதாக அதன் தலைவர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.