Title of the document

பொறியியல் படிப்பில் சேர ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்த 1.59 லட்சம் மாணவர்களுக்கு சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்') செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும், விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். கலந்தாய்வு ஜூலை 6- ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முதன் முறையாக இந்த ஆண்டு ஆன்-லைனில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு மே 3- ஆம் தேதி தொடங்கி ஜூன் 2-ஆம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 1,59,631 பேர் ஆன்-லைனில் பதிவு செய்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிடக் கூடுதலாகும். 

சம வாய்ப்பு எண் வெளியீடு: இந்த நிலையில், ஆன்-லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சம வாய்ப்பு எண் வெளியிடும் நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், செயலர் சுனில் பாலிவால், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன், பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பதிவாளர் கணேசன், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர், செயலர், தொழில்நுட்ப கல்வி இயக்குநர், துணைவேந்தர் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோரிடமிருந்து தலா இரண்டு மூல (சீட்) எண்கள் பெறப்பட்டு, அதிலிருந்து கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,59,631 மாணவர்களுக்குமான சம வாய்ப்பு எண் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. 

செல்லிடப்பேசி எண்ணுக்கும்...: இந்த சம வாய்ப்பு எண் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதோடு, மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும். இதில், சம வாய்ப்பு எண்ணுடன், சான்றிதழ் சரிபார்ப்புக்கான இடம், தேதி, நேரம், டோக்கன் எண் உள்ளிட்ட விவரங்களும் இடம்பெற்றிருக்கும். இதை மாணவர்கள் பதிவிறக்கமும் செய்து கொள்ள முடியும்.

சம வாய்ப்பு எண் எதற்கு?: பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளோரில், ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆஃப் மதிப்பெண் பெறும்போது, அவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்ற கேள்வி எழும். அப்போது கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கணித மதிப்பெண் ஒரே மாதிரியாக இருக்கும்போது, இயற்பியல் பாட மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படும். அதுவும் சமமாக இருக்குமானால், பிளஸ்-2 நான்காவது பாட மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படும்.

இந்த பாட மதிப்பெண்கள் அனைத்தும் சமமாக இருக்குமானால், பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும். பிறந்த தேதியும் சமமாக இருக்கும்போது, சம வாய்ப்பு எண் அடிப்படையில் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

கடந்த ஆண்டில் 27 மாணவர்களுக்கு...: கடந்த 2017-18-ஆம் கல்வியாண்டில் தரவரிசைப் பட்டியல் தயாரிப்பதற்கு 27 மாணவர்களுக்கு சம வாய்ப்பு எண் பயன்படுத்தப்பட்டது. எனவே, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்போது நிகழ் கல்வியாண்டில் எத்தனை மாணவர்களுக்கு சம வாய்ப்பு எண் பயன்படுத்தப்பட்டது என்பது தெரிய வரும்.

ஜூன் 8 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு: பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு 42 உதவி மையங்களிலும் ஜூன் 8 ஆம் தேதி தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை நடத்தப்படும்.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மட்டும் ஜூன் 8 ஆம் தேதி முதல் ஜூன் 17-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு மாணவர்கள் செல்ல வேண்டிய தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள், அவர்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்படும். அது மட்டுமின்றி அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இந்த விவரங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.

தரவரிசைப் பட்டியல் எப்போது?: சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும், விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 17-ஆம் தேதிக்குப் பிறகு வெளியிடப்படும்.

இடங்கள் எவ்வளவு? : 2018-19-ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் 509 பொறியியல் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, எம்.ஐ.டி. ஆகிய மூன்று துறைகளில் 9,110 இடங்கள், அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 1,020 இடங்கள், அரசு பொறியியல் கல்லூரிகளில் 4,960 இடங்கள், அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 1,362 இடங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 1,61,679 இடங்கள் என மொத்தம் 1,78,131 பி.இ., பி.டெக். இடங்கள் ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இது கடந்த ஆண்டைவிடக் குறைவாகும்.

கடந்த 2017-18-ஆம் கல்வியாண்டு பி.இ. கலந்தாய்வில் 1,82,214 பி.இ., பி.டெக். இடங்கள் இடம்பெற்றிருந்தன என அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

கலந்தாய்வு எப்போது?: பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வைப் பொருத்தவரை வரும் ஜூலை 6-ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். முதல் கலந்தாய்வுக்குப் பின்னரே இந்த தேதி இறுதி செய்யப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

26 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தம் 

வேலைவாய்ப்பு கிடைப்பதில் சிக்கல், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள் குறைப்பு நடவடிக்கை, ஊதியக் குறைப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பி.இ. படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.

இதன் காரணமாக, மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்தும் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அதுபோல இந்த ஆண்டு 26 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நிறுத்தியுள்ளன. 

இது குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில், 2018-19-ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி பெறுவதற்கும், அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு அந்தஸ்து பெறுவதற்கும் 26 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை. அதன்படி, இந்த 26 கல்லூரிகளிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இருக்காது என்றார் அமைச்சர் அன்பழகன்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post