Title of the document

ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை விட்டு பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆசிரியர்கள் பணியிடங்களை குறைக்கக் கூடாது என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்படுகிறது.  ஆசிரியர்கள் ஸ்டிரைக் என்று சொன்னால் மக்கள் ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று கேட்கிறார்–்கள். 365 நாட்கள் பணி நாட்கள் உள்ள நிலையில் 210 நாட்கள் தான் பள்ளி நடக்கிறது. 
அதிலே தேர்வுக்காக குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் 170 முதல் 175 நாட்கள் தான் பள்ளி நடக்கிறது. புதிய பாடங்களை நடத்துவதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

பள்ளிகளை உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வசதியாக தொடக்கப் பள்ளிகள்  30 பள்ளிகளாக பிரிக்கப்பட்டு  அவர்கள் ஆண்டுக்கு 2 முறையாவது நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.  
மேலும், பள்ளிகள் மீது குற்றம் குறைகள் மற்றும் புகார்கள் வந்தால் அடுத்த 1 மணி நேரத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பதில் கொடுத்தாக வேண்டும். அதற்கான தீர்வுகளையும் அவர்கள் உடனடியாக செய்ய வேண்டிய அனுமதியும் வழங்கப்படுகிறது. 
வேகமாக பணி நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. அரசுக்கு நிதி நெருக்கடி உள்ள நிலையில், ஒரு நபர் கமிட்டியிடம் ஆசிரியர்கள் அலுவலர்கள் உங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இந்நிலையில் பள்ளி திறந்த பிறகு ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளனர். 
அதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே ஆசிரியர்கள் உண்ணா விரதம் போன்ற போராட்டங்களை கைவிட்டு பள்ளிகள் சிறப்பாக செயல்பட ஒத்துழைக்க வேண்டும். 
 கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க ஆன்லைன் மூலம் 1 லட்சத்து 32 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இரண்டு நாட்களில் குழு அமைத்து அவற்றுக்கு தீர்வு காணப்படும். 

தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அவற்றை பள்ளி தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும்.  கூடுதல் கட்டணம் கேட்டால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணகிரியில் உள்ள பள்ளி ஒன்றில் 29 மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. 
அங்கு தெலுங்கு மொழி ஆசிரியர் இல்லை. அதனால் இந்த நிலை. எனவே அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து ஜூன் 25ம் தேதி நடக்க உள்ள தேர்வில் தேர்ச்சி பெற ஏற்பாடு செய்யப்படும். பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  
ஜூன் மாத இறுதிக்குள் நிரப்பப்படும். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு குறிப்பிட்ட நாளில் வெளியாகும். பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதி பிளஸ் 1 வகுப்பில் சேர்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post